கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்களை விடுவிக்கக்கோரி இரண்டாவது நாளாக கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி சார்பில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டது. பல நூறு அடி ஆழத்தில் இருந்து இந்த கிணறுகள் மூலம் உறிஞ்சப்படும் கச்சா எண்ணெய், அங்கிருந்து குத்தாலம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. ஆழ்குழாய் அமைத்து கச்சா எண்ணெய் உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது, நிறம் மாறி நீர் மாசடைகிறது, விவசாய நிலங்கள் பாதிப்படைகிறது என குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கசிவு காரணமாக அதிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் திறந்த வெளியில் ஓடி, அப்பகுதி வயல்களில் பரவியது. இதனால் பதற்றமடைந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். மேலும், எண்ணெய் கசிவை சரிசெய்ய வந்த அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் போராட்டம் நடத்தினர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனிடையே, எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் பதற்றம் மேலும் அதிகரித்தது. தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதனைக் கண்டித்தும், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி-க்கு எதிராக போராடியவர்களை விடுவிக்கக் கோரியும் அங்கு வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.