கதிராமங்கலத்தில் கைதானவர்களை விடுவிக்கக்கோரி டிராபிக் ராமசாமி திடீர் போராட்டம்

கதிராமங்கலத்தில் கைதான 9 பேரையும் விடுவிக்கக்கோரி, சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, திடீர் தற்கொலை மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்

சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, தனது அலுவலகம் உள்ள கட்டிடத்தின் நான்காவது மாடியில் ஏறி நின்று கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

சென்னையைச் சேர்ந்தவர் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி. இவர் சென்னை ஐகோர்ட்டில் பல பொது நல வழக்குகள் தொடர்ந்து வெற்றி பெற்றவர். ஜெயலலிதா ஆட்சியின் போது, மிகப் பிரமாண்ட பேனர்கள் நடைபாதையை மறைத்து வைக்கப்பட்டத்தை எதிர்த்து போராடி வந்தார்.

சென்னை திநகரில் விதியை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கச் சொல்லி வழக்குத் தொடர்ந்து வெற்றி கண்டார்.

இந்நிலையில் பாரிமுனையில் உள்ள தனது அலுவலகத்தில், திடீரென உண்ணாவிரதம் இருந்தார். இன்று காலை உண்ணாவிரதத்தை அவர் தொடங்கினார். கதிராமங்கலத்தில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் குற்றம்சாட்டி வந்தார்.

இந்நிலையில் மாலையில் திடீரென கட்டிடத்தின் நான்காவது மாடிக்கு சென்றார். அங்கு தண்ணீர் தொட்டி வைக்கப்பட்ட இடத்துக்கு அருகில் படுத்துக் கொண்டார். இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எதுவாக இருந்தாலும் கீழே இறங்கி வாருங்கள் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

அவரோ, ‘அதெல்லாம் முடியாது. இன்றைக்குள் கதிராமங்கலத்தில் கைதானவர்களை விடுதலை செய்து விட்டு வாருங்கள் என்று கோபமாக சொன்னார். அவருடைய ஆதரவாளர்கள் சொன்ன போதும், அவர் கேட்கவில்லை. ‘யாராவது என்னை வற்புறுத்தினால் மேலிருந்து குத்தித்து தற்கொலை செய்து கொள்வேன்’ என்று மிரட்டினார். இதயடுத்து அங்கிருந்தவர்கள் கீழே இறங்கிவிட்டனர்.

அதன் பின்னர் நிருபர்கள் அவரிடம் கேட்ட போது, ‘நான் கதிராமங்கலம் சென்ற போது போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை சந்தித்துப் பேசினேன். அவர்கள் மீது விபச்சார வழக்குப் போடுவோம் என்று போலீஸார் மிரட்டியுள்ளனர். கைதானவர்கள் என்ன பெரிய தப்பு செய்துவிட்டார்கள். போராடியவர்களை இரண்டு முறை காவல் நீடிப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் கொலையா செய்துவிட்டார்கள்.

மக்கள் உடல் நலத்தோடு விளையாடும் அமைச்சர் விஜயபாஸ்கரைவிடவா அவர்கள் தவறு செய்துவிட்டார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு இருக்கிறது. அவரை ஏன் கைது செய்யவில்லை. முதல் அமைச்சர் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் இருக்கிறது. என்ன நடவடிக்கை எடுத்தார்கள். சுப்ரிம் கோர்ட்டே உத்தரவிட்டும் அமைச்சர் காமராஜ் இன்னும் வெளியே சுற்றிக் கொண்டு இருக்கிறார்.

நீதிபதிகளுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. அவர்கள் நினைத்தால் உடனடியாக கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முடியும். இன்று இரவுக்குள் அவர்களை விடுவிக்காவிட்டால், இங்கேயே படுத்து செத்துப் போவேன்’ என்றார்.

போலீசாரும், அவருடைய ஆதரவாளர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close