Advertisment

பிளஸ் டூ ரிசல்ட்: 8.8 லட்சத்தில் ஒருவராக ஜெயித்த ஷ்ரேயா; கல்லூரி கனவை அரசு சாத்தியம் ஆக்குமா?

"நான் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு தமிழக அரசு நிதியுதவி செய்ய வேண்டும். எனது பள்ளி மூலமாக அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள்ளேன். அரசு கல்லூரியில் சீட் கிடைக்க முதல்வர் ஸ்டாலின் ஐயா உதவி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது" -ஷ்ரேயா

author-image
Vasuki Jayasree
New Update
ஷ்ரேயா

ஷ்ரேயா

12ம் வகுப்பு தேர்வில் 337 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்திருக்கிறார் திருநங்கை மாணவி ஷ்ரேயா. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பாளையம் இவரது சொந்த ஊர். பள்ளிப்பாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்தான் இவர் 12ம் வகுப்பு படித்திருக்கிறார். 2017ம் ஆண்டு தாரிக்கா பானு என்ற திருநங்கை மாணவி  தமிழகத்திலிருந்து முதல் முறையாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவரைத் தொடர்ந்து 12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இரண்டாவது திருநங்கை மாணவி ஷ்ரேயா. இவரிடம்  இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பில் பேசினோம்.

Advertisment

12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், உங்களது வெற்றி கூடுதல்  முக்கியத்துவம் பெற்றுள்ளது, நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

என் வாழ்வில் நான் படிப்பைத்தான் எப்போதும், விடாமால் பற்றிப் பிடித்திருந்தேன். இந்த முடிவு எனக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

நீங்கள் பெண்ணாக எப்போது உணர்ந்தீர்கள்?

நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது உணர்ந்தேன். என்னுள் நிகழ்ந்த மாற்றங்களை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. ஆனால் என்னால் அந்த உணர்வுகளை என்னுள் அடைத்து வைத்துக்கொள்ள முடியவில்லை. வெளித்தோற்றத்திற்கு வேண்டுமானால் நான் ஆணாக அப்போது இருந்திருக்கலாம், ஆனால் எனது மனது பெண்மையைத்தான் தேடியது.

பெண்ணாக மாற்றமடைந்தது எப்போது? அந்த சவாலான காலக்கட்டத்தை எப்படி கடந்தீர்கள்?

2017-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்திருந்தேன். இதற்கு மேல் என்னால் ஆணாக இருக்க முடியாது என்று தோன்றியது. அதற்கு மேல் எனது உணர்வுகளை அடைத்து வைக்க நான் விரும்பவில்லை. இதை வீட்டில் அம்மாவிடம் எப்படி கூறுவது என்ற எண்ணம் என்னை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அம்மா ஏற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருந்தும், இதை வெளிப்படுத்தினால், அம்மாவுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்தேன்.

எனது அத்தையின் சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தேன்.  அங்கு நடனமாடிய திருநங்கைகளிடம்,  பேசினேன். அப்போது அவர்கள் “ நீ திருநங்கையாக உணர்வதை புரிந்துகொள்கிறோம். ஆனால் நீ படிப்பை மட்டும் எப்போதும் நிறுத்திவிடக்கூடாது. தொடர்ந்து படிக்க வேண்டும் “ என்று கூறினார்கள்.  குறிப்பாக ஷக்கிலா அம்மா என்னை வழிநடத்தினார். ’படிப்புதான் உன் பலம். அதை நிறுத்தக்கூடாது “ என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பார். என்னை அவர் இப்போது வரை வழி நடத்துகிறார். 

வீட்டில் இருந்து வெளியேறி, டெல்லி சென்றேன். தவறான வழிக்கு நான் செல்லவில்லை. அங்கே  கடை திறக்கும் நிகழ்வு, கோவில் நிகழ்ச்சி போன்ற விழாக்களில் நடனமாடுவேன். அந்த பணத்தில்தான், அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். தொடர்ந்து, மீண்டும் சொந்த ஊருக்கு வந்தேன். கிட்டதட்ட 4 வருடங்கள் சவாலாக இருந்தது. அந்த 4 வருடங்களில் மீண்டும் படிப்பை தொடர வேண்டும் என்ற ஆசை மட்டும் குறையவேயில்லை.

சொந்த ஊருக்கு வந்ததும் அம்மா என்னை ஏற்றுக்கொண்டார். மீண்டும் வீட்டுக்கு சென்றதும், படிப்பை எப்படி தொடரலாம் என்றுதான் முதலில்  யோசித்தேன்.

12ம் வகுப்பு எப்போது சேர்ந்தீர்கள்? எப்படி சாத்தியமானது?

பள்ளிக்கு சென்றால் என்னை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணம்தான் என்னை அதிகமாக பாதித்தது. இதை கடந்து பள்ளிக்கு செல்ல முடியுமா? என்று தொடர்ந்து யோசித்தேன். அப்போது திருநங்கைகள் கலந்துகொண்ட நிகழ்வில், கவுன்சிலர் திருநங்கை ரியாவை சந்தித்தேன். “ அடுத்து என்ன செய்யப்போகிறேன்” என்று என்னிடம் கேட்டார். 12ம் வகுப்பு படிக்க வேண்டும் என்று கூறினேன். அவர்  இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார். முதல்வர் அவர்கள் இது தொடர்பாக நாமாக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறித்தி இருக்கிறார்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் திருநங்கைகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டேன். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்-யிடம் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்க உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தேன். அதை உடனே படித்து பார்த்துவிட்டு , ‘பள்ளிப்பாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிப்பதற்கான உத்தரவை வழங்கினார். அடுத்த நாளே பள்ளிக்கு சென்று அட்மிஷன் போடுமாறு கூறினார்.

இதைத்தொடர்ந்து கவுன்சிலர் ரியா மற்றும் எனது அம்மாவுடன் அடுத்த நாள் பள்ளிக்கு சென்றேன். 11ம் வகுப்பில், ஆர்ட்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவை தேர்வு செய்வதாக பள்ளியில் கூறினேன். அதற்கான அட்மிஷனையும் பதிவு செய்துவிட்டு, புத்தகங்களையும் பெற்று வீடு திரும்பினேன்.

தேர்வு எழுதுவதற்கு மட்டும்தான் செல்ல வேண்டும் என்று கூறுவார்கள் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் 20 நாட்களுக்குள் என்னை அழைத்து பள்ளிக்கு வருமாறு கூறினார்கள். மற்ற மாணவிகளைப் போல் ரெட்டை ஜடை பிண்ணல், சீருடையுடன் பள்ளிக்கு சென்றேன். அந்த நாளை என்றுமே மறக்க இயலாது.

publive-image

பள்ளிக்கு அட்மிஷன் போடும் நாளில் அம்மாவுடன் ஸ்ரேயா எடுத்து புகைப்படம்: இடது பக்கம்

இந்த இரண்டு ஆண்டுகளில் கேலிகளை கடக்கும் நிலை பள்ளியில் ஏற்பட்டதா?

இல்லைவே இல்லை. எனது பேராசியர், ஆசிரியர்கள், என்னுடன் படிக்கும் மாணவிகள் என்னை புரிந்துகொண்டனர். என்மீது அனைவரும் அன்பாக இருந்தனர். நானும் என்னோடு படிக்கும் 6 மாணவிகளும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். ஒன்றாகத்தான் பள்ளிக்கு செல்வோம், விளையாடுவோம், ஒன்றாகவே படிப்போம். எங்கள் 6 பேரின் நட்பும் ஆழமானது.

அம்மாவைப் பற்றி கூற முடியுமா?

அம்மா பெயர் ராஜேஷ்வரி. நெசவு வேலைதான் செய்கிறார். காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றால் இரவு 8 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவார். அப்பா எங்களை பிரிந்து 7 வருடங்கள் ஆகிறது. அப்பா ஏற்படுத்திய கடனை அம்மா இன்னும் கட்டிக்கொண்டுகிறார். சொற்ப வருமானம் கிடைத்தாலும், இதுவரை என்னை அவர்தான் பார்த்துக்கொள்கிறார். அம்மாவுக்கு இதுவரை என்னால் ஒரு ரூபாய் கூட  சம்பாதித்து தர முடியவில்லை.  அம்மாவுக்கு இப்போது உடல் நிலை சரியில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து வேலைக்கு செல்கிறார். வீட்டின் பொருளாதார சூழலால் , 12ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிடலாம் என்று முடிவெடுத்திருந்தார். ஆனால் இன்று எனக்கு கிடைத்த  முக்கியத்துவதால், வெளியூரில் விடுதியில் தங்கியாவது அடுத்தக்கட்ட படிப்பை தொடர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தேர்வு பயத்தை எப்படி கடந்து சென்றீர்கள்? தேர்வுக்கு எப்படி தயார்படுத்திக்கொண்டீர்கள் ?

10ம் வகுப்பு முடித்துவிட்டு, சுமார் 4 வருடங்கள் என்னால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. பெண்ணாக மாறும் போராட்டத்தில் 4 வருடங்கள் சென்றுவிட்டது.  இந்த இடைவேளையால் முன்புபோல் படிக்க முடியுமா ? என்ற பதற்றம் இருந்தது. ஆனால் படித்தே ஆக வேண்டும் என்ற ஆர்வம், இந்த பயத்தை கடக்க வைத்தது. பள்ளியில் படிப்பதை தவிற, தினமும் 2 முதல் 3 மணி நேரம்  படிப்பேன். அக்கவுண்ட்ஸ் பாடத்தில் மட்டுமே எனக்கு சந்தேகங்கள் எழும். அதற்கு கூடுதல் நேரம் செலவிட்டு படிப்பேன். 12ம் வகுப்பு தேர்வு நெருங்கிய போது எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். மொழிப் பாடத் தேர்வுகள்,  இரண்டையும் மருத்துவமனையில் இருந்து நேரடியாக தேர்வு மையத்திற்கு சென்றுதான் எழுதினேன். தேர்வின்போது காலை 4 மணிக்கே எழுந்து படிப்பேன்.  

கல்லூரி படிப்பு தொடர்பாக என்ன முடிவு செய்துள்ளீர்கள் ?

சிறு வயது முதலே  கப்பல் மேலாண்மை( Ship management) தொடர்பாக படிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை . அதற்காக BBA லாஜிஸ்டிக்ஸ் படிக்க வேண்டும் . ஆனால் அது படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் எங்கள் ஊரில் உள்ள ’கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்’, பி.பி.ஏ படிப்பதற்கு விண்ணப்பித்துள்ளேன். பி.பி.ஏ படித்ததும், எம்.பி.ஏ ஷிப் மேனேஜ்மென்ட் (MBA Logistics and Shipping Management) படிப்பை தொடர்ந்து படிக்க வேண்டும்

நான் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு தமிழக அரசு நிதியுதவி செய்ய வேண்டும். எனது பள்ளி மூலமாக அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள்ளேன். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 2 அரசு கல்லூரியிலும், சேலம் மாவட்டத்தில் ஒரு கல்லூரியிலும், ஈரோடு மாவட்டத்தில் 2 கல்லூரியிலும் விண்ணப்பித்துள்ளேன். இந்த 5 அரசு கல்லூரிகளில் ஒன்றிலாவது எனக்கு சீட் வழங்க அரசு உதவி செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் ஐயா நிச்சயம் இதை செய்து தருவார் என்று நம்பிக்கை உள்ளது. இந்த ஒரு வாய்ப்பை எனக்கு வழங்கினால் போதும், நிச்சியம் சாத்தித்து காட்டுவேன்.

ஒரு பக்கம் அதிக மதிப்பெண் எடுத்து மாணவர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், தேர்ச்சி பெறவில்லை என்பதால் இன்று மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.  இது குறித்து உங்கள் கருத்து?

மிகவும் வருத்தம் அளிக்கிறது. உயிரை விட மதிப்பெண் முக்கியம் என்று எந்த பெற்றோரும் கருதமாட்டார்கள். பொற்றோர் மன வேதனை அடைவார்கள் என்று நினைப்பதைவிட, அடுத்த முறை எப்படி தேர்ச்சி பெறுவது என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டும். பெற்றோர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் அதை நாம்தான் புரிய வைக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment