ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, பனி நிரந்தரம், ஓய்வூதிய பணப்பலன்கள் உள்ளிட்ட ஏராளமான பணப்பலன்கள் நிலுவையில் உள்ளன. அத்துடன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2016-ஆம் ஆண்டு அமலாக வேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தமும் அமலாகவில்லை.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவை தொகை, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மே மாதம் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
தொடர்ந்து, தமிழக அரசுடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், வருகிற செப்டம்பர் மாதத்தில் பிரச்னைகள் இறுதி செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அரசின் இந்த உறுதியையேற்று அப்போது வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் இறுதி செய்யப்படுவதாக கூறப்பட்ட பிரச்னைகளை சரி செய்யக்கூடிய எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை என தெரிகிறது. அதேபோல், அரசு சார்பில், பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுவரை நடந்த 10 கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித சுமுக உடன்பாடும் எட்டப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதத்தில் போராட்டம் நடத்தியது போன்று மீண்டும் போராட்டம் நடத்துவது என அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்து, அதற்கான நோட்டீசை தமிழக அரசிடம் அளித்துள்ளன. அதன்படி, வருகிற 24ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வேலைநிறுத்தத்தில், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ், டி.டி.எஸ்.எப்., டி.எம்.டி.எஸ்.பி., பி.டி.எஸ்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 43 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்கவுள்ளார்கள் எனவும், அதே நேரத்தில் எங்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து திறந்த மனதுடன் அரசு எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் அதில் நாங்கள் பங்கேற்போம் எனவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.