பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்துதல், ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாததால், ஞாயிற்றுக் கிழமை முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டன. இது தொடர்பாக போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள், போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் தொழிலாளர் துறை ஆணையருக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இதனிடையே, சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கடந்த 19-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், போக்குவரத்து துறை அமைச்சருடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்துவதும், என்றும் அதுவரை போராட்டத்தை ஒத்திவைப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்திருந்தன.
இந்த நிலையில், சென்னையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில், போக்குவரத்து துறை செயலாளர், 8 போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக 47 சங்கங்கள் கலந்து கொண்டன.
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ1200 ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்ட்டது.
இதையடுத்து, அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது: அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்த கருத்தோடு, தொழிலாளர்களுடைய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலதாமதாவதால் இடைக்கால நிவாரண நிதியாக ரூ.1200 மாதந்தோறும் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலுவைத் தொகை வழங்குவது குறித்து டிச. 9-ம் தேதி, உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். தொழிற்சங்க நிர்வாகிகளுடன் டிசம்பர் முதல் வாரத்தில் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.
தொ.மு.ச பொதுச் செயலாளர் கூறும்போது: இடைக்கால நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை 3-மாதத்திற்குள் சரி செய்வதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, நாங்களும் இந்த பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த வேலை நிறுத்தத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.