ஒவ்வொரு காதலர் தினமும் உலகத்தில் காதலிக்கிற எல்லோருக்கும் சிறப்பு காதலர் தினம்தான். ஆனால், மணிகண்டன் – சுரேகா ஆகிய இவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு காதலர் தினம் மிகவும் ஸ்பெஷல்தான். ஏனென்றால், திருநங்கை சுரேகா(24) மணிகண்டன் (25) தம்பதியர் இந்த காதலர் திணத்தில் தாங்கள் திருமணம் செய்ததற்கான திருமணப் பதிவு சான்றிதழைப் பெற்றுள்ளனர்.
திருநங்கை சுரேகாவும் மணிகண்டனும் காதலித்து போராடி பிப்ரவரி 14, 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணம் செய்துகொண்ட நாளில் இருந்து அவர்களுடைய திருமணத்தை பதிவு செய்வதற்கு போராடி வந்தனர்.
இவர்களுடைய சமூகம் ஏற்றுக்கொண்டாலும் சட்டப்படி அவர்கள் திருமணத்தை பதிவு செய்வது என்பது பெரிய தடையாக இருந்தது. அவர்கள் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய பலமுறை பதிவுத்துறை அலுவலகத்துக்கு சென்று கேட்கும்போது திருநங்கையும் ஆணும் திருமணம் செய்துகொள்வதை பதிவு செய்ய சட்டம் இல்லை என்று கூறி மறுத்து வந்தனர்.
இந்த நிலையில், திருநங்கைகளின் திருமணங்களை பதிவு செய்யும்படி சென்னை பதிவுத்துறை தலைவரிடம் இருந்து அனைத்து மாவட்ட மற்றும் துணை பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜனவரி 28 அன்று ஒரு அறிவிப்பை அனுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கோவையில் உள்ள பதிவுத் துறை அதிகாரிகள் சமீபத்தில் மணிகண்டன் மற்றும் சுரேகா ஆகியோருக்கு தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்யும் சட்டம் 2009-ன் கீழ் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பு, மணிகண்டன் – சுரேகா தம்பதியருக்கு ரெட்டை மகிழ்ச்சியை அளித்தது. ஒன்று இதன் மூலம், அவர்களுடைய திருமணத்தை பதிவு செய்வதற்கான போராட்டம் முடிவடைந்தது. மற்றொன்று இந்த அறிவிப்பு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள எந்தவொரு திருநங்கையும் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய இது உதவும்.
தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்யலாம் என்றவுடன் சிறிதும் தாமதிக்காமல், மணிகண்டனும் சுரேகாவும் தங்கள் திருமணத்தை காதலர் தினத்தில் பதிவு செய்ய விரும்புவதாக பதிவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டனர்.
இந்த பதிவுத் திருமணத்தால் தங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக சுரேகா ஊடகங்களிடம் கூறியுள்ளார். மணிகண்டன் – சுரேகா திருமணப் பதிவு வடவல்லியில் உள்ள துணைப் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து மணிகண்டன் ஊடகங்களிடம் கூறுகையில், “இந்த திருமணப் பதிவுச் சான்றிதழ் நாங்கள் ஒரு குழந்தையை சட்டப் பூர்வமாக தத்தெடுக்க உதவும்” என்று கூறினார்.
இதன் மூலம், திருமணம் செய்துகொண்டு 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நிண்ட காத்திருப்பு மற்றும் போராட்டத்துக்குப் பிறகு இந்த காதலர் தினத்தில் மணிகண்டன் திருநங்கை சுரேகா தம்பதியினர் திருமணப் பதிவுச் சான்றிதழைப் பெறுகின்றனர்.