ஆசிரியர் இடமாறுதலிலும் ஊழல்... விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: அன்புமணி

ஓரளவு நேர்மையாகவும், திறமையாகவும் செயல்படும் அமைச்சகம் என்ற பெயரைப் பெற்றிருந்த பள்ளிக்கல்வித் துறையிலும் பல கோடி ஊழல் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஆசிரியர் இடமாறுதலில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை என்பதைப் போல, பினாமி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில் எந்த அமைச்சகமுமே ஊழலுக்கு அப்பாற்பட்டதாக இருக்காது போலிருக்கிறது. ஓரளவு நேர்மையாகவும், திறமையாகவும் செயல்படும் அமைச்சகம் என்ற பெயரைப் பெற்றிருந்த பள்ளிக்கல்வித் துறையிலும் பல கோடி ஊழல் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் அண்மையில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர்களை இடமாறுதல் செய்வதில் தான் பெருமளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2017-18-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும், 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தரம் உயர்த்தப்படும் 100 மேல்நிலைப்பள்ளிகளில் தலா 9 ஆசிரியர்கள் வீதம் 900 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 150 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 5 ஆசிரியர்கள் வீதம் 750 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப முடியாது என்பதால் பிற பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை கலந்தாய்வு முறையில் இடமாற்றம் செய்து தான் இந்த தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளை நடத்த முடியும்.

அந்த வகையில் பார்த்தால் 100 மேல்நிலைப் பள்ளிகளில் 900 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 100 தலைமையாசிரியர்கள் என 1000 பேரும், 150 உயர்நிலைப்பள்ளிகளில் 750 பட்டதாரி ஆசிரியர்கள், 150 தலைமையாசிரியர்கள், ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் 900 தலைமையாசிரியர் பணியிடங்கள் என 1800 பேரும் இடமாறுதல் கலந்தாய்வு மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களில் அமர்த்தப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 150 நடுநிலைப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகள் தனியாக பிரிக்கப்பட்டு தொடக்கப்பள்ளிகளாக மாற்றப்படும். இந்த பள்ளிகளுக்கு 150 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அவையும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட வேண்டும். மொத்தம் 2950 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.

ஆனால், இவற்றில் நீதிமன்ற வழக்கு காரணமாக உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் தவிர மீதமுள்ள 1900 பணியிடங்களையும் நிர்வாக மாறுதல் மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான பணியிட மாறுதல் ஆணைகள் தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கும் ஆட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், வெகுவிரைவில் நீதிமன்றத் தடை நீக்கப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது நடந்தால் பள்ளிக்கல்வித்துறையின் மிகப்பெரிய ஊழலாக இருக்கும்.

கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்கப்படும் போது, அது வெளிப்படையான முறையில் தேவையானவர்களுக்கு மட்டும் கிடைக்கும். குடும்பத்தைப் பிரிந்து வெகு தொலைவில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்திலோ, அல்லது அதற்கு அருகிலுள்ள மாவட்டத்திலோ மாறுதல் கிடைக்கும்.

இட மாறுதலுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருப்போருக்கு கிடைக்கும் அரிய வாய்ப்பு இதுவாகும். ஆனால், நிர்வாக மாறுதல் முறையில் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் மற்றும் கத்தைக் கத்தையாக பணம் கொடுப்பவர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்திற்கு மாறுதல் வழங்கப்படும். அவர்களுக்கு வழங்கப்பட்டது போக மீதம் ஏதேனும் இருந்தால் பிறருக்கு வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் பொது இட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். கடந்த மே மாதம் நடந்தக் கலந்தாய்வு மிகவும் வெளிப்படையாக நடைபெற்றது. அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஆனால், இப்போது பணியிட மாறுதலுக்கு பதவி நிலைக்கு ஏற்றவாறு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு மாறுதலுக்கு சராசரியாக ரூ.4 லட்சம் என வைத்துக் கொண்டாலும் ஒட்டுமொத்தமாக ரூ.118 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக உதயச் சந்திரன் பொறுப்பேற்ற பிறகு அத்துறையில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. அனைத்தும் சட்டப்படி நடைபெற்று வந்தது மிகவும் மனநிறைவாக இருந்தது. ஆனால், இப்போது அத்துறையிலேயே ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுவது அதிர்ச்சியளிக்கிறது.

எனவே, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான ஆசிரியர் பணியிடமாற்ற ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக கலந்தாய்வு நடத்தி அதனடிப்படையில் இடமாறுதல் ஆணைகளை வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த சிக்கல் குறித்து விசாரணைக்கும் ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close