scorecardresearch

கேக் வடிவில் மு.க.ஸ்டாலின்… திருச்சியில் அசத்திய பேக்கரி உரிமையாளர்

தமிழகத்தில் திறம்பட செயல்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 6 அடி கேக்; திருச்சியில் அசத்திய பேக்கரி உரிமையாளர்

கேக் வடிவில் மு.க.ஸ்டாலின்… திருச்சியில் அசத்திய பேக்கரி உரிமையாளர்

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் விதவிதமான கேக்குகள் தயாரிக்கும் பணிகளில் பேக்கரி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில், கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஶ்ரீராஜேஸ்வரி ஸ்வீட் பேக்கரி கடை ஒன்றில் 10 நாட்கள் கேக் திருவிழா நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்: கோவை: ஆளுனருக்கு எதிராக போஸ்டர் யுத்தம் தொடங்கிய தி.மு.க

இதில் வலது கையை உயர்த்தியபடி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிற்பது போல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கேக் வாடிக்கையாளர் மத்தியில் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சுமார் 6 அடியில் 90 கிலோவில் இந்த கேக்கை பேக்கரி ஊழியர்கள் தயாரித்து உள்ளனர்.

பொதுவாக அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற பிரபலங்களுக்கு அவர்களது பிறந்தநாளில் இதுபோன்ற கேக்குகளை தயாரித்து காட்சிப்படுத்துவது வழக்கம். மேலும் பிரபலங்களுக்கும், சாதனையாளர்களுக்கும் மெழுகு சிலை அமைத்து பெருமை சேர்ப்பார்கள்.

அந்த வகையில் இந்த கேக்கை உருவாக்கிய கடை உரிமையாளர், தமிழகத்தில் திறம்பட செயல்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த கேக்கை உருவாக்கியதாக கூறினார்.

இந்த கேக்கை 90 கிலோ சர்க்கரை, 80 முட்டை கலந்த கலவையால் 24 மணி நேரத்தில் பேக்கரி ஊழியர்கள் 4 பேர் குழுவாக சேர்ந்து தயாரித்துள்ளனர். இந்த கேக் இரண்டு நாட்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனை அங்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தில் உருவாக்கப்பட்ட கேக்குடன் செல்பி எடுத்து செல்கின்றனர்.

மேலும் இந்த கண்காட்சியில் குழந்தைகளை கவரும் விதத்தில் பிளாக் பாரஸ்ட், டாம் அண்ட் ஜெர்ரி கேக், பாண்டா, குதிரை, யானை போன்ற பல்வேறு வடிவங்களில் மற்றும் பிறந்தநாள் கேக்குகள் என பல்வேறு கேக்குகளை சிறப்பாக வடிவமைத்து கண்காட்சியில் காட்சிப் படுத்தியுள்ளனர். இதனை திருச்சி பொதுமக்கள் அனைவரும் வியப்புடனும் ஆர்வத்துடனும் கண்டு களித்து செல்கின்றனர்.

சுமார் ஆறு அடியில் கையை உயர்த்திய வண்ணம் தமிழக முதலமைச்சரின் இந்த கேக் உருவ பொம்மை தற்போது பயங்கர வைரலாகி வருகிறது. மேலும் 90 கிலோ கேக்கில் தத்துரூபமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலையை செய்த பேக்கரி ஊழியர்களை அங்கு வரும் பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் வெகுவாக பாராட்டி செல்கின்றனர். மேலும் இதுபோன்ற கேக் தயாரிப்பது ஒரு கலை எனவும் சமூக ஆர்வலர்கள் பெருமை தெரிவித்தனர்.

க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy bakery owner creates 6 feet stalin cake