திருச்சியில் ரூ.11 கோடி தங்க நகை கொள்ளை: 12 பேரை வளைத்த எஸ்.பி-யின் தனிப்படை

சென்னை ஆர்.கே. சில்வர் நகைக்கடை ஊழியர்கள் 10 கிலோ தங்க நகைகளுடன் திரும்பும்போது, திருச்சி இருங்களூர் அருகே மிளகாய் பொடி தூவி கொள்ளை நடந்தது.

சென்னை ஆர்.கே. சில்வர் நகைக்கடை ஊழியர்கள் 10 கிலோ தங்க நகைகளுடன் திரும்பும்போது, திருச்சி இருங்களூர் அருகே மிளகாய் பொடி தூவி கொள்ளை நடந்தது.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
theft 1

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் ரூ.11 கோடி மதிப்பிலான தங்கக் கட்டி மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமையிலான தனிப்படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு 12 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 9.432 கிலோ தங்கம் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டது. இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) செ. செல்வநாகரத்தினம் இன்று (அக். 5-ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

Advertisment

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஆர்.கே. சில்வர் என்ற நகைக்கடையின் மேலாளர் குணவந்த், கடை ஊழியர் மகேஷ் ராவல் மற்றும் ஓட்டுநர் பிரதீப் ஜாத் ஆகியோர் தங்க பிஸ்கட் மற்றும் நகைகளுடன் கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் சில்லரை விற்பனை செய்வதற்காக கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி காரில் சென்றனர். திண்டுக்கல்லில் விற்பனையை முடித்துக்கொண்டு மீதமுள்ள சுமார் 10 கிலோ தங்க நகைகளுடன் இவர்கள் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, திருச்சி, சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருங்களூர் எஸ்.ஆர்.எம். மருத்துவமனை அருகே, சரியாக இரவு 8.20 மணியளவில், இயற்கை உபாதை கழிப்பதற்காகக் காரை நிறுத்தி கீழே இறங்கினர்.

அப்போது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த கருப்பு நிற காரில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள், குணவந்த் உட்பட மூவரின் கண்களிலும் மிளகாய் பொடியைத் தூவிவிட்டு, 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வழிப்பறி செய்து தப்பிச் சென்றனர். குணவந்த் அளித்த புகாரின்பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், லால்குடி டி.எஸ்.பி. தினேஷ்குமார், காவல் ஆய்வாளர்கள் கருணாகரன், ரகுராமன், முத்தையன், குணசேகரன், கண்ணதாசன் ஆகியோர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

theft

கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவு எண் (டி.என்.06-வ்0608 ) போலியானது என்றும், அதன் உண்மையான பதிவெண் (25 பி.ஹெச்.4097 ஜெ) என்றும், அதன் உரிமையாளர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படையினர் கர்நாடகா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, பீகார் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய வெளிமாநிலங்களில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
 
விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களின் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் பிரதீப் ஜாத்திற்கே இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. பிரதீப் ஜாத் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த மனோகர் ராம் ஆகியோரைக் கைது செய்து விசாரித்ததில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 250க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள், 12 வங்கிக் கணக்குகள் மற்றும் 15க்கும் மேற்பட்ட டோல் பிளாசாக்களின் ஆய்வுகள் முக்கியத் துப்பு அளித்தன.

Advertisment
Advertisements

இதன் அடிப்படையில், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற காரை கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மத்திய பிரதேசம் சென்ற போலீசார், மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலையில் பர்வானிக்குச் சென்ற பேருந்தில் சோதனை செய்தனர். அப்போது, இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளியான ஜோத் மங்கிலால் மற்றும் விக்ரம் ஜாட் ஆகியோரைக் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், பன்னாராம் தேவாசி என்கிற வினோத், சொகைல்கான் என்கிற முகமது சொகைல், கைலாஷ், ஹனுமான் ஜாட், மனிஷ் சிரோகி, பரத் ராம், ராகேஷ் மற்றும் அவரது மனைவி லட்சுமி தேவி ஆகிய 10 பேரையும் தனிப்படையினர் கடந்த 5ஆம் தேதி மும்பையில் வைத்து கைது செய்தனர். தமிழக காவல்துறையினரால் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பிற மாநில போலீசாரின் உதவியுடன் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 9.432 கிலோ தங்க நகைகள், ரொக்கம் ரூ.6 லட்சம், ஒரு நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள், 7 ஸ்மார்ட் போன்கள், 1 பட்டன் போன் மற்றும் 40 சிம் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விரைந்து செயல்பட்ட தனிப்படையினரை எஸ்.பி. செல்வநாகரத்தினம் பாராட்டினார். மேலும், அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்தக் கொள்ளை வழக்கில் எடுத்துச் செல்லப்பட்ட தங்க நகைகள் உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்டது குறித்து வருமானவரித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

பொதுமக்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கான சில அறிவுரைகளையும் அவர் வழங்கினார். வேலைக்கு ஆட்களைச் சேர்க்கும்போது அவர்களின் பின்புலம் குறித்து ஆய்வு செய்த பின்னரே அமர்த்த வேண்டும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது உரிய பாதுகாப்புடன், அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செல்ல வேண்டும். வாகனங்களை பொதுமக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும், இருள் சூழ்ந்த பகுதிகளில் நிறுத்தக் கூடாது. அவசர உதவிக்கு தமிழ்நாடு காவல்துறையின் காவல் உதவி மொபைல் செயலியைப் பயன்படுத்த வேண்டும். கொள்ளையர்களைப் பிடித்த தனிப்படை அதிகாரிகள் குழுவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் இணைந்து செய்தியாளர்கள் மத்தியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: