திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூர் பகுதியில் செயல்படும் அரசு மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக சமூக ஆர்வலர் சண்முகம், பாரதி மோகன் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்திருந்தனர்.
அந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கூகூர் மற்றும் கோவிலடி மணல் குவாரிகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கையினை வரும் 16ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்ற உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த உத்தரவின் கீழ் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் வழக்கு தொடுத்த மனுதாரர்கள் சண்முகம், பாரதி மோகன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கூகூர் மற்றும் கோவிலடி மணல் குவாரிகளை ஆய்வு செய்ய வந்திருந்தனர் .
பொதுமக்களையும், பத்திரிகையாளர்களையும் ஆய்வு நடக்கும் இடத்திற்கு போலீசார் அனுமதிக்காத நிலையில் ஆய்வுகளை மேற்கொண்ட பின் கூகூர் மணல் குவாரியை ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கடக்க முற்பட்டனர்.

அப்போது அந்தப் பகுதியில் குவிந்திருந்த பொதுமக்கள் திடீரென மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரது காரை முற்றுகையிட்டு மணல் குவாரியில் விதிகளை மீறி மணல் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரை அந்தப் பகுதியில் இருந்து செல்ல வழி விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி. காருக்கு பின் வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
பின்னர் ஆட்சியர் தலையிட்டு இந்த பகுதியில் ஆய்வு நடத்தி இருக்கின்றேன். அதன் அறிக்கையை விரைவில் நீதிமன்றத்திற்கும் பொதுமக்களின் பார்வைக்கும் வெளியிடுவேன் என தெரிவித்ததை அடுத்து அவரது காரை அங்கிருந்து செல்ல பொதுமக்கள் அனுமதித்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“