நீட் துயரம் : பறிபோனது மேலும் ஒரு மாணவியின் உயிர்

நீட் தேர்வில் தேர்ச்சிப்பெறாத காரணத்தால், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2018ம் ஆண்டின் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால், திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ. துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 907 மதிப்பெண்கள் எடுத்த சுபஸ்ரீ மருத்துவப்படிப்பின் சேர்க்கைகாக நீட் தேர்வு எழுதியிருந்தார்.

தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் சுபஸ்ரீ நீட் தேர்வில் 24 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்று தெரியவந்தது.இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது சுடிதார் துப்பாட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு திரும்பிய பெற்றோர் தூக்கில் தொங்கிகொண்டிருக்கும் மகளை பார்த்து பதறினர். உயிருக்கு போராடி கொண்டிருந்த சுபஸ்ரீயை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுபஸ்ரீயின் உயிர் பரிதாபமாக பிரிந்தது.

இந்த சம்பவம் குறித்து டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் மருத்துவ படிப்புக்கு சேர முடியவில்லை என்று சுபஸ்ரீ மன உளைச்சலில் இருந்தது தெரியவந்துள்ளது.

×Close
×Close