Advertisment

வீரப்பூர் கோவில் திருவிழாவில் கல்லா கட்டிய டாஸ்மாக்; 100% கூடுதல் விலைக்கு விற்றதால் மதுப் பிரியர்கள் அவதி

வீரப்பூர் திருவிழாவை முன்னிட்டு திருச்சி டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது. இந்த கடைகளுக்கு திருச்சி மாநகரில் பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் சூப்பர்வைசர்கள், விற்பனையாளர்களை வீரப்பூருக்கு அனுப்பியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy

Trichy veerapur temple festival 2023

திருச்சியை அடுத்துள்ள மணப்பாறையில் பிரசித்தி பெற்ற வீரப்பூர் பெரிய காண்டி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடக்கும் வேடபரி குதிரை ஓட்டம், வீரப்பூர் பெரிய தேரோட்டம் மிக பிரசித்தி பெற்றது.

Advertisment

அதன்படி, வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவிலில் மாசிப் பெருந்திருவிழா கடந்த மாதம் 18 ஆம் தேதி மகா சிவராத்திரி அன்று துவங்கியது. 10 நாட்கள் தொடர்ந்து நடக்கும் இந்த விழாவில் மூன்று நாட்கள் மிக முக்கியமானதாக கருதப்படும். நேற்று வேடபரி குதிரை தேர், இன்று பெரிய திருத்தேரோட்டம், நாளை மஞ்சள் நீராட்டு மிக முக்கியமானதாகும்.

நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்வோடு வீரப்பூர் கோயில் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வீரப்பூர் திருவிழாவை முன்னிட்டு திருச்சி டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது. இந்த கடைகளுக்கு திருச்சி மாநகரில் பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் சூப்பர்வைசர்கள், விற்பனையாளர்களை வீரப்பூருக்கு அனுப்பியது.

இந்த நிலையில் தான் வீரப்பூரில் 10568 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையின் பெயரில், தற்காலிகமாக நான்கு கடைகள் அமைக்கப்பட்டது. இந்தக் கடைகளில் பணியாற்ற திருச்சி மாநகரில் இருந்து 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் டாஸ்மாக் மேலாண்மை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நான்கு நாட்களில் லட்சக்கணக்கான ரூபாயை ஈட்டும் டாஸ்மாக் நிர்வாகம் இரட்டிப்பு விலையில் மதுப்பிரியர்களிடம் இருந்து பணத்தை கறந்து விடுகிறது.

வீரப்பூர் டாஸ்மாக் கடை விவகாரம் தொடர்பாக கோயில் திருவிழாக்கு வந்த நபர் ஒருவர் தெரிவிக்கையில்; வீரப்பூர் கோயில் திருவிழா என்றாலே கிடா வெட்டு, கறி விருந்து என அமர்க்களப்படும். கறி விருந்து என்றபோது மது விருந்துக்கு பஞ்சம் இல்லை தான். ஆனால் என்ன திருச்சியில் இருந்து 70 கிலோ மீட்டருக்கு தொலைவில் உள்ள உள்ள வீரப்பூருக்கு வரும் நாங்கள் மதுவை கொண்டு வருவதில்லை. இங்கே வாங்கிக் கொள்ளலாம் என்று வந்தபோது எங்களுக்கு பேரதிர்ச்சி தான் காத்திருந்தது.

வீரப்பூரில் உள்ள டாஸ்மாக் கடை எண் 10568 என்ற பெயரிலேயே தற்காலிகமாக மூன்று கடைகள் இருந்தன. வழக்கமாக டாஸ்மாக் கடையில் 130 ரூபாய்க்கு விற்கப்படும் மது பாட்டில்கள் இங்கு 210 க்கும், 200க்கும் விற்கப்பட்டன. பீர் பாட்டில்கள் வழக்கமாக டாஸ்மார்க் கடையில் 160 ஆனால் இங்கே 260 க்கு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன. ஏன், எதற்கு என்று கேள்வி கேட்க யாரும் இல்லை. கிடைத்தால் போதும் என்ற நிலையில் நாங்களும் வாங்கிச் சென்றோம். குவார்ட்டர் சரக்கு பாட்டிலில் சுமார் கூடுதலாக ரூ.80 முதல் 100 வரை அதிகம் வைத்து விற்கப்பட்டது. பீர் பாட்டிலுக்கு ரூ.100 கூடுதலாக வைத்து விற்கப்பட்டது எங்களுக்கு வேதனை. திருவிழா காலங்களில் டாஸ்மாக் நிர்வாகம் மது மேல் கூடுதல் விலை வைத்து இப்படி கல்லா கட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றார் பரிதாபமாக.

மது பிரியரின் குற்றச்சாட்டு குறித்து அங்கே உள்ள டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவரிடம் பேசுகையில்; வீரப்பூர் திருவிழா என்றாலே கறி விருந்து களை கட்டுவது போல் மதுபான விற்பனையும் களை கட்டும்.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில்தான் நாங்கள் தற்காலிகமாக இரண்டு மூன்று கவுண்டர்களை திறந்துள்ளோம். நாங்கள் திருச்சியில் இருந்து தான் இங்கு வந்து தங்கி பணியாற்றுகிறோம். நாங்கள் கடையை மூடி விட்டும் செல்ல முடியாது, மது பிரியர்கள் இரவு நேரத்தில் கலவாடக்கூடும்.

இன்று ஒரு நாள் மட்டும் இரண்டு தற்காலிக கவுண்டர்களில் 7 லட்சத்திற்கும் மேல் வருவாய் கிடைத்தது. இந்த நான்கு நாட்களில் திருச்சியின் ஒட்டுமொத்த வருவாயை வீரப்பூரில் எடுத்து விடுவோம்.

டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பது சட்டப்படி தவறில்லையா என்று கேட்டதற்கு, இங்கே கிடைக்கும் லாபம் டாஸ்மாக் சூப்பர்வைசர்கள், விற்பனையாளர், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் இள அனைவருக்கும் பங்கு சென்று விடுகிறது.

publive-image

வீரப்பூர் விவகாரம் குறித்து திருச்சி டாஸ்மாக் டி. எம். ராம்குமார் என்பவரை தொடர்பு கொண்டபோது, நாங்க இந்த நாலு நாட்களுக்கு மட்டுமே சிறப்பு கவுண்டர்களை வைத்திருக்கிறோம். கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என அறிவுறுத்தி இருக்கிறோம். நீங்கள் சொன்னதின்படி நாங்கள் விசாரணை செய்கிறோம் என அழைப்பை துண்டித்துக் கொண்டார்.

கோவில் திருவிழாவுக்கு வந்த பக்தர்களில் பல்லாயிரக்கணக்கானோர் கறி விருந்துக்கு சைடிஷ் ஆக மது பாட்டிலை வாங்கிடச் சென்றவர்களுக்கு இரட்டிப்பு விலை பேரதிர்ச்சியாகவே இருந்தது என்கின்றனர் அப்பகுதியினர்.

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில் : திருவிழா என்றால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து கூடுதலாக அந்த வழித்தடத்தில் இயக்கப்படுவதும், சுகாதாரத் துறையினரால் கூடுதல் பணியாளர்களை அப்பகுதியில் நியமித்து நோய்த்தொற்றுகள் பரவாது காக்கும் பொருட்டு பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்துவதும், பாதுகாப்புக்காக கூடுதலாக காவலர்களை அனுப்புவதும் வழக்கம்.

ஆனால் திருச்சி மாவட்ட நிர்வாகமோ திருவிழா நடைபெறும் பகுதியில் உள்ள டாஸ்மாக்  கடையில்  கூடுதல் கவுண்டர்களை ஆங்காங்கே திறந்து மதுபானங்களை விற்பனை செய்வது எந்த விதத்தில் நியாயம்.

இந்த குடியால் திருவிழா சமயத்தில் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏழும் சூழலை மாவட்ட நிர்வாகமே ஏற்படுத்தி இருப்பது வேதனைதான்.

இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த  உயர் அலுவலர்கள் தலையிட்டு திருவிழாக்கள் நடக்கும் பகுதிகளில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment