தனியார் பால் நிறுவனங்களை மிரட்டி ஆதாயம் பெறும் முயற்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈடுபட்டிருப்பதாக விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியர் பால் நிறுவனங்களில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும், அதை ஆய்வு நடத்த குழுக்கள் அமைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆவின் பால் நிறுவனத்தில் தண்ணீர் கலப்படம் செய்து குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும், ஊனமுற்றோர்களுக்கும் வழங்கப்படுவதில் பல முறைகேடுகள் நடந்தது. இதை பலமுறை தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போதெல்லாம் கண் இருந்தும் குருடனாய், காது இருந்தும் செவிடனாய், வாய் இருந்தும் ஊமையாய் இருந்தாரோ என மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது.
அப்போது செவிசாய்க்காத இந்த அதிமுக அரசு, இப்போது திடீர் ஞானோதயம் வந்தது போல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது, தனியார் பால் நிறுவனங்களை மிரட்டி ஆதாயம் பெறுவதற்கான முயற்சியோ என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஏற்கனவே ஆவின் பால் நிறுவனத்தில் சுமார் ஆண்டுக்கு 72 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அதிமுகவைச் சேர்ந்த லாரி ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
ஏற்கனவே ஆவின் நிறுவனத்தில் லாரி டெண்டர் விடுவதிலும் பால் கொள்முதல் செய்வதிலும், பால் விற்பனை செய்வதிலும் பல முறைகேடுகள் நடபெற்றதையும், அதேபோல ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், தேமுதிக எதிர்கட்சியாக இருந்த போது பால் விலை உயர்வை கண்டித்து சட்டசபையில் ஏற்பட்ட விவாதத்தை நாடறியும். பாலின் தரத்திலும் விற்பனையிலும் ஏற்படும் முறைகேடுகளை தேமுதிக எப்போதும் சுட்டிக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. பாலில் மட்டுமல்ல அனைத்து உணவு பொருட்களிலும் ரசாயனம் கலக்கப்படுவதையும், முறைகேடுகள் நடைபெறுவதையும் தடுத்து நிறுத்தி தனியார் நிறுவனங்கள் தவறுகள் செய்து இருந்தால், அவைகளின் மீதும் உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.