நீட் தேர்வுக்கு எதிராக வருகிற 16-ம் தேதி திருச்சியில் பொதுக் கூட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்தவர் அனிதா. சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என கனவு கண்டு, அதற்காக சிரமப்பட்டு படித்து வந்தார். அவரது உழைப்புக்கு ஏற்றார்போல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து, 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்றார். ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால், மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு போராடிய அனிதா, நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பால் விரக்தியடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால், கடும் மன உளைச்சலில் இருந்த அனிதா, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் தற்கொலை தமிழகத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் ஆங்கங்கே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அனிதாவின் உயிரிழப்புக்கு மத்திய - மாநில அரசுகள் தான் பொறுப்பு என குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகளும் போராட்டம், பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அதேசமயம், நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக போட்டிக் கூட்டங்களை கூட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக வருகிற 16-ம் தேதி திருச்சி உழவர் சந்தையில் பொதுக் கூட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். முன்னதாக, நீட் தேர்வுக்கு எதிராக செப்டம்பர் 9-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். ஆனால், நீட் போராட்டம் தொடர்பான வழக்கில் போராட்டம் நடத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதாக முதலில் தகவல் வெளியானது. இதையடுத்து, தினகரனின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்பின்னர், "சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை நீதிமன்றம் உணர்ந்தே இருக்கிறது" என தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.