டிடிவி தினகரன் அணியில் இருப்பவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதாகவும், எனவே ஆட்சிக்கு ஆபத்தில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக கால்கோள் நாட்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது: அதிமுக-வின் மாவட்ட செயலாளர்கள் 4 பேர் மட்டுமே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கவில்லை. மற்ற அனைவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலமையை ஏற்றுக் கொண்டுவிட்டனர். கடந்த 7 மாதங்களாக திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்.
அதற்கு உதவி செய்ய அதிமுக-வின் வழிகாட்டிக்கொடுப்பார்கள் என சிலர் குள்ளநரி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மா தமிழகத்தை சுற்று வருகிறது. அதனால் தான் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சீறும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. அவர்களது ஆன்மா ஆசீர்வதிப்பதால் தான் தற்போது தருமபுரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கான கால்கோள் விழாவை கொண்டாட முடிகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆட்சி தொடர்வதற்கு எதிராக திமுக-வுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் அந்த பிறப்பிற்கே பயனற்றவர்கள்.
டிடிவி தினகரன் அணியிலிருந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வந்த ஜக்கையன் எம்.எல்.ஏ. மிகத்தெளிவாகக் கூறியிருக்கிறார். ஒரு வருத்தத்தில், கோபத்தில் நாங்கள் தவறாக நிலைப்பாட்டை எடுத்ததான் காரணமாக அந்த அணிக்கு செல்ல நேரிட்டது. அறுதிப் பெரும்பான்மை எங்கே இருக்கிறது என்று சிந்தித்துப் பார்த்து, அதன் படிப்படையில் இந்த ஆட்சி கவிழக்கூடாது என நினைத்தேன். ஜெயலலிதாவின் ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக திரும்பி வந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.
டிடிவி தினகரன் அணியில் இருப்பவர்கள், தாங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். வெளியே வரமுடியாமல் வைக்கப்பட்டுள்ளோம் என்று தொடர்ந்து செய்தி அனுப்பி வருகின்றனர். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு தருவோம் என்றும் தகவல் தெரிவித்து வருகின்றர். எனவே தற்போதைய ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.