சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 3 சுற்றுகள் முடிவில் டிடிவி தினகரன் 15,868 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். மதுசூதனன் 7,033 வாக்குகள் பெற்றுள்ளார். மருதுகணேஷ் 3,750 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த தினகரன், "மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஆர்.கே.நகர் மக்கள் தற்போது தீர்ப்பளித்துள்ளனர். ஒட்டுமொத்த தமிழக மக்களின் சார்பாக ஆர்.கே.நகர் மக்கள் வாக்களித்துள்ளனர். மதுசூதனன் ரவுடியிசத்தின் மொத்த உருவம். அதனால் அங்கே ரவுடிகள் நின்றுக் கொண்டு எங்களுடைய பூத் ஏஜெண்டுகளை அடித்துள்ளனர். இன்னும் மூன்றே மாதங்களில் இந்த ஆட்சியே அகலப் போகிறது. அதற்கு பிறகு அவர்கள் போய் கடலில் தான் விழ வேண்டும்.
நான் சுயேச்சை வேட்பாளர் கிடையாது. நாங்கள் தான் உண்மையான அண்ணா திமுக தொண்டர்கள். புரட்சித் தலைவரிடமும், ஜெயலலிதாவிடமும் இரட்டை இலை இருந்தால் தான் மதிப்பு. எம்.என் நம்பியாரிடமும், பி.எஸ்.வீரப்பாவிடமும் இருந்தால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். வேட்பாளரை வைத்தே சின்னம் நிர்ணயிக்கப்படுகிறது. சின்னம் யாரிடம் இருக்கிறது, கட்சியின் பெயர் யாரிடம் இருக்கிறது என்பது முக்கியமல்ல. மக்களின் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதே முக்கியம். ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக ஆர்.கே.நகரில் யார் சட்டமன்ற உறுப்பினராக வர வேண்டும் என அப்பகுதி மக்கள் முடிவு செய்துவிட்டனர்" என்றார்.