டிடிவி.தினகரன் தனது அடுத்த அதிரடியாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கத்தை அதிமுக.வில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
அதிமுக அணிகள் இணைப்பு அந்தக் கட்சியில் அமைதியை உருவாக்கும் என எதிர்பார்த்தால், கூடுதல் புயலைக் கிளப்பியிருக்கிறது. டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆகஸ்ட் 22-ம் தேதி (இன்று) சென்னை கிண்டியில் கவர்னர் மாளிகையான ராஜ்பவனுக்கு சென்று ஒரு மனு கொடுத்தனர். அதில், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக’ தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிச்சாமிக்கு உருவாகியிருப்பதாக கருதப்படுகிறது. இந்தச் சூழலில் டிடிவி.தினகரன் தனது அடுத்த அதிரடியாக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கத்தை கட்சியை விட்டு நீக்குவதாக துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் டிடிவி.தினகரன் இன்று (ஆகஸ்ட் 22) அறிவித்தார்.
அதிமுக இணைப்பைத் தொடர்ந்து ஆகஸ்ட் 21-ம் தேதி அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்திலிங்கத்தை வழிகாட்டும் குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய வைத்திலிங்கம், ‘விரைவில் பொதுக்குழுவை கூட்டி, சசிகலாவை நீக்குவோம்’ என குறிப்பிட்டார். இதை கட்சி விரோத நடவடிக்கையாக கருதி, அவரை டிடிவி.தினகரன் நீக்கியிருக்கிறார்.
ஆனால் இது குறித்து இன்று (ஆகஸ்ட் 22) பேட்டியளித்த வைத்திலிங்கம், “என்னை நீக்க தினகரனுக்கு அதிகாரம் கிடையாது. சிறையில் உள்ள பொதுச்செயலாளரின் ஆலோசனையின் பெயரில் இந்த நடவடிக்கையை எடுத்ததாக அவர் கூறியிருக்கிறார். சிறையில் இருப்பவர், எப்படி இவருக்கு ஆலோசனை கூறியிருக்க முடியும். தவிர, தினகரன் தற்போது கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை. அவரது நடவடிக்கை செல்லாது” என்றார் வைத்திலிங்கம்.
அதிமுகவில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணிகளின் இணைப்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் உச்சகட்ட அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.