அதிமுக-வில் உச்சகட்ட குழப்பம்: 64 புதிய நிர்வாகிகள் – சுற்றுப்பயணத்தை டிடிவி.தினகரன் அறிவித்ததால் பரபரப்பு

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் அடுத்தடுத்த அதிரடிகளால், அதிமுக-வில் வில் உச்சகட்ட குழப்பமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

By: Updated: August 4, 2017, 08:46:56 PM

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விடுத்த காலக்கெடு முடிவடையும் நிலையில், சுற்றுப்பயணம் மற்றும் 64 புதிய நிர்வாகிகளை அவர் நியமித்தால் அதிமுக-வில் உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதும், பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டு அணிகளாக பிளவு கண்டது. சசிகலா சிறை சென்றதும், டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெறவிருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்தானது. அதிமுக கட்சி மற்றும் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம், அதிமுக அம்மா அணி என்ற பெயரில் சசிகலா அணியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்ற பெயரில் பன்னீர்செல்வம் அணியும் செயல்பட உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, அதிமுக சின்னம் மற்றும் கட்சியை மீட்க லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட புகாரில் டிடிவி தினகரன் சிறை சென்றார். கட்சி எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எடப்பாடி ஆதரவாளர்கள் தனியாக செயல்பட்டனர். பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறி வரும் அவர்கள், டிடிவி தினகரனை புறக்கணித்தனர்.

சிறைக்கு செல்லும் முன்னர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்த தினகரன், சிறையில் இருந்து வெளியே வந்ததும் கட்சி நடவடிக்கைகளில் இறங்கினார். தனது ஆதரவாளர்களை தொடர்ந்து சந்தித்து வந்த அவர், இரு அணிகளையும் இணைக்கும் பொருட்டு சுமார் 60 நாட்கள் காலக்கெடு அளித்தார். அவர் அளித்த காலக்கெடு ஆகஸ்ட் 5-ல் முடிவடையும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அவர் செல்வார் என கூறப்பட்டது.

இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு 7 மணியளவில் சென்னையில் தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்த டிடிவி.தினகரன், வருகிற 14-ம் தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணத்தை டிடிவி தினகரன் அறிவித்தார். ஆகஸ்ட் 14-ம் தேதி மதுரை மாவட்டம் மேலுாரில் தனது சுற்றுப் பயணத்தை தினகரன் தொடங்குகிறார்.

தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி வடக்கு மாவட்டம்-வடசென்னை, ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி தேனி மாவட்டம்-தேனி. செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கரூர் மாவட்டம்-கரூர். செப்டம்பர் மாதம் 12-ம் தேதி தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்-தஞ்சாவூர். செப்டம்பர் மாதம் 23-ம் தேதி திருநெல்வேலி மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம்-திருநெல்வேலி, செப்டம்பர் மாதம் 26-ம் தேதி தருமபுரி மாவட்டம்-தருமபுரி. செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திருச்சி மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம்-திருச்சி. செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சிவகங்கை மாவட்டம்-சிவகங்கை-யில் தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சுற்றுப் பயண அறிவிப்புடன் தினகரன் நிறுத்தி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் கட்சியில் புதிதாக 64 நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டினார். கட்சியை மேலும் சிறப்பாக வழிநடத்த கூடுதலாக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தினகரன் விளக்கம் அளித்துள்ளார். சசிகலா சிறை சென்ற பின்னர், இதுவரை கட்சி நிர்வாகிகள் மாற்றமோ, நியமனமோ செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட 18 பேரை அமைப்புச் செயலாளர்களாகவும், நாஞ்சில் சம்பத், இளவரசன் ஆகியோரை கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாகவும், தங்கதுரை, திருப்பூர் சிவசாமி உள்ளிட்டோர் தேர்தல் பிரிவு இணைச் செயலாளர்களாகவும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவராக கேகே சிவசாமி, இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், பொருளாளர், புரட்சித் தலைவி அம்மா பேரவை நிர்வாகிகள், கழக எம்ஜிஆர் அணி நிர்வாகிகள், கழக மகளிர் அணி நிர்வாகிகள், கழக விவசாயப் பிரிவு, கழக மீனவர் பிரிவு, மருத்துவர் அணி நிர்வாகிகள், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை பிரிவுகளில் நிர்வாகிகளை நியமனம் செய்தும் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய நிர்வாகிகளை தினகரன் நியமித்து வருவதால், தங்களையும் மாற்ற வாய்ப்புள்ளது என்ற தகவல், எடப்பாடி பழனிச்சாமி அணியை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதேசமயம், பன்னீர்செல்வம் ஆதரவு மாநில நிர்வாகிகளின் கூட்டம் ஆகஸ்ட் 5-ல் பன்னீரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. பன்னீர்செல்வம் அணியினரும், டிடிவி தினகரனின் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த கூட்டத்திலும், தினகரனின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. தினகரனின் அறிவிப்பை தொடர்ந்து, அதிமுக-வில் உச்சகட்ட குழப்பமும், பரபரப்பும் நிலவி வருகிறது என்பது குறப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Ttv dhinakaran announces tour and appoint new executives

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X