Advertisment

டிடிவி.தினகரன் கைதாவாரா? கர்நாடகாவில் தமிழக போலீஸ் முகாமிட்ட பின்னணி

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்கின்றன. அவரை ‘டார்கெட்’ செய்யவே கர்நாடகாவில் தமிழக போலீஸ் முகாமிட்டது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
ttv dhinakaran arrest, ttv dhinakaran, aiadmk, aiadmk merger, aiadmk crisis, aiadmk general council meeting, cm edappadi palaniswami, tamilnadu police

டிடிவி.தினகரன் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்கின்றன. அவரை ‘டார்கெட்’ செய்யவே கர்நாடகாவில் தமிழக போலீஸ் முகாமிட்டது.

Advertisment

டிடிவி.தினகரனே இப்போதைய அதிமுக அரசுக்கு பிரதான மிரட்டல்! 3 முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆட்சிக்கு எதிராக கச்சை கட்டியபோது. 11 எம்.எல்.ஏ.க்கள்தான் அவருக்கு ஆதரவாக வந்தனர். பிரதான எதிர்க்கட்சியான திமுக, இந்த ஆட்சியை அகற்ற எடுத்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.

இந்தச் சூழலில் சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் நீக்கியதும், டிடிவி.தினகரன் தனது உச்சகட்ட ஆவேசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலைகள் தொடங்கிவிட்டன’ என இன்று (செப்டம்பர் 12) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டிடிவி.தினகரன் கூறினார்.

கர்நாடகாவில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 21 எம்.எல்.ஏ.க்கள்தான் டிடிவி.தினகரனின் பிரதான பலம்! மொத்தமுள்ள 135 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் 21 பேரை கழித்தால், எடப்பாடி அரசுக்கான ஆதரவாக 114 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். இது மெஜாரிட்டிக்கு தேவையான 117 எண்ணிக்கையில் இருந்து 3 குறைவு! எனவே இந்தச் சூழலில் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டால், ஆட்சி தப்புவது கடினம்.

இந்தச் சூழலை பயன்படுத்த நினைக்கும் திமுக, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடும்படி ஆளுனருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதில் அடுத்தகட்டமாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்திலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று வழக்கு தொடர்ந்தார். எனவே இதில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் கவர்னருக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆட்சி கவிழ்ப்பு அபாயத்தில் இருந்து தப்பிக்க, டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களில் சிலரை தங்கள் அணிக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாகவே இன்று கர்நாடகாவில் குடகு பகுதியில் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் சொகுசு விடுதியில் தமிழக போலீஸார் முற்றுகையிட்டனர்.

அங்கு டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரிடமும், ‘நீங்கள் சுயமாக இங்கு தங்கியிருக்கிறீர்களா? உங்களை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்திருப்பதாக சொல்கிறார்களே? நீங்கள் ஊருக்கு வர விரும்பினால் எங்களுடன் வரலாம். உங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். டிடிவி.தினகரன் இந்த ஆட்சியை கவிழ்க்கப்போவதாக இன்று கூறியிருக்கிறார். அதில் உங்களுக்கு உடன்பாடா? உடன்பாடு இல்லையென்றால் எங்களுடன் வாருங்கள்!’ என்கிற கோண்டத்தில் போலீஸார் பேசிப் பார்த்ததாக தெரிகிறது.

இந்த எம்.எல்.ஏ.க்களில் யாராவது ஒருவர் வெளியே வந்து, ‘என்னை டிடிவி.தினகரன் தூண்டுதலில் கடத்தி வைத்தனர்’ என வாக்குமூலம் கொடுத்தால் அதன் அடிப்படையில் டிடிவி.தினகரன் மீது வழக்கு பாயும் என தெரிகிறது. தவிர, மன்னார்குடியில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். சில இடங்களில் கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களிலும் அவர்கள் இறங்கினர். இது போன்ற நிகழ்வுகளில் டிடிவி.தினகரன் தூண்டுதல் இருக்கிறதா? என்கிற கோணத்தில் விசாரிக்க போலீஸுக்கு உத்தரவு வந்திருப்பதாக கூறுகிறார்கள்.

இதற்கிடையே திருச்சியில் அதிமுக எம்பி குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், டிடிவி. தினகரன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மக்களவை தொகுதி அதிமுக எம்பியான குமாரை, அதிமுக இளைஞர் இளம்பெண் பாசறை மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து, டி.டி.வி தினகரன் நீக்கினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குமார், தன்னை கட்சியில் இருந்து நீக்க துணைப் பொதுச் செயலாளரான தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை என கடுமையாக சாடினார்.

இந்நிலையில் டிடிவி தினகரன் தன்னை தொலைபேசியில் மிரட்டியதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குமார் எம்.பி புகார் அளித்துள்ளார். அதன்மீது விசாரணை நடத்துமாறு மாநகர குற்றப்பிரிவு போலீஸாருக்கு, காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன் பேரில் டிடிவி.தினகரன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்பு வரை டிடிவி.தினகரன் அணி சார்பில் நாஞ்சில் சம்பத், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக தாக்கிப் பேசினார். குறிப்பாக ஜெயா டிவியை கைப்பற்ற இருப்பதாக அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் போட்டதும், முதல்வரின் பெயரைச் சொல்லி காரசாரமாக சவால் விட்டார் சம்பத். அதைத் தொடர்ந்து பாஜக.வினர் மூலமாக அவர் மீது நான்கைந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இருப்பதாகவும் போலீஸ் தரப்பிலிருந்து தகவல்கள் பரவின. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பத் வழக்கு தொடர்ந்தார். அதில் இன்னும் முடிவு கிடைக்கவில்லை. ஆனால் அந்த வழக்குகளுக்கு பிறகு பேட்டிகள் அளிப்பதையே சம்பத் வெகுவாக குறைத்தார்.

டிடிவி.தினகரனும் கூட டெல்லி வழக்குகளுக்கு பிறகு மத்திய அரசை விமர்சிப்பதை கைவிட்டார். எனவே அதே வழிமுறையை பின்பற்றி டிடிவி.தினகரனுக்கு ‘செக்’ வைக்க மாநில அரசு தயாராகிவிட்டதாக தெரிகிறது. அது வெறும் பயமுறுத்தலில் முடியுமா, கைது வரை போகுமா? என்பது தெரியவில்லை.

Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment