அந்திய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து

டிடிவி தினகரன் மீதான அந்திய செலாவணி மோசடி வழக்கின் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிடிவி தினகரன் மீதான அந்திய செலாவணி மோசடி வழக்கின் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்த உயர் நீதிமன்றம் புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்து மூன்று மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் பெயரில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் 44 லட்சம் பவுண்டு முறைகேடாக முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996-ஆம் ஆண்டில் டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறையினர் அந்நியச் செலாவணி மோசடி வழக்கைப் பதிவு செய்தனர்.

அதேபோல், ஐரோப்பிய நாடுகளில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் என்ற பெயரில் ஹோட்டல் தொடங்குவதற்காக டிப்பர் இன்வெஸ்ட்மென்ட், டெண்டி இன்வெஸ்ட்மென்ட், பேனியன் ட்ரீ ஆகிய மூன்று நிறுவனங்கள் சார்பில் இங்கிலாந்து பார்க்லே வங்கியில் 36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் ஒரு லட்சம் பவுண்டு முறைகேடாக முதலீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக டிடிவி தினகரன் மீது கடந்த 1996-ல் அமலாக்கத்துறை மற்றொரு வழக்கையும் பதிவு செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி டிடிவி தினகரன் மீதான இந்த இரண்டு வழக்கு விசாரணையும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் கடந்த ஏப்ரல் மாதம் தினகரன் மீது எழும்பூர் பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டிருப்பதாகவும், ஏற்கனவே பதியப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்து, குற்றச்சாட்டு பதிவில் தங்கள் தரப்பு வாதங்களை ஏற்க அனுமதிக்க வேண்டும். அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க கடந்த 7-ம் தேதி இடைக்கால தடை விதித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் இன்று வழங்கினார். அதில், “டிடிவி தினகரனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்வதாகவும். மீண்டும் புதிதாக குற்றச்சாட்டு பதிவை எழும்பூர் நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும். இந்த குற்றச்சாட்டு பதிவை வருகிற 31-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாள் பதிவு செய்ய வேண்டும். தினந்தோறும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு வழக்கின் விசாரணையை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

×Close
×Close