வழக்கை இழுத்தடிக்கிறார் தினகரன் - ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை!

அன்னிய செலாவணி மோசடி வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தினகரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்

எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள அன்னிய செலாவணி மோசடி வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தினகரன் மனுத்தாக்கல் செய்துள்ளதாக அமலாக்கப் பிரிவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக, டிப்பர் இன்வேஸ் மெண்ட் என்ற நிறுவனம் மூலமாக பணம் டெபாசிட் செய்தது, ஐரோப்பிய நாட்டில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் ஹோட்டல் பெயரில் மூன்று நிறுவனங்கள் தொடங்கப்பட்டதில் 36.36 லட்சம் அமெரிக்க டாலரும், 1 லட்சம் பவுண்டு வரை அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, டி.டி.வி தினகரன் மீது 1996ம் ஆண்டு அமலாக்கபிரிவு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்குகளில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தினகரன் மீது எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. அதேபோல அமலாக்கப்பிரிவு தரப்பு சாட்சியங்களிடம் குறுக்கு விசாரணையும் முடிவடைந்தது.

இந்நிலையில், லண்டன் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனது தரப்பு சாட்சிகள் 17 பேரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும், இந்த வழக்கு குறித்து விசாரணை அதிகாரி இந்திய தூதுரத்திற்கு அனுப்பிய ஆவணங்களை தனக்கு வழங்க கோரியும் டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், தினகரன் மீதான வழக்கின் விசாரணைக்கு ஏற்கனவே தடை விதித்திருந்தார்.

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கப்பிரிவு உதவி இயக்குனர் சாதிக் முகமது நைனார் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், டிடிவி தினகரன் கோரும் ஆவணங்கள் ஏற்கனவே விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டுள்ளது என்றும், அந்நிய செலாவணி மோசடி வழக்கை இழுத்தடிக்கவே டிடிவி தினகரன் உயர்நீதிமன்றத்தை நாடியிருப்பதாகவும், வழக்கு விசாரணை இறுதி கட்டத்தில் இருப்பதால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கும்படி கோர முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி எம்.வி.முரளிதரன் மார்ச் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close