எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தினர். டிடிவி தினகரன் மாநாட்டுக்கு கூட்டம் திரண்ட நிலையில், அவரை சமாளிப்பது குறித்து ஆலோசித்தார்கள்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அதிமுக.வை வழிநடத்தி வருகிறார்கள். இவர்கள் இணைந்து டிடிவி தினகரனை கட்சியை விட்டு நீக்கினர். சசிகலா மீது தமிழ்நாடு முழுவதும் நிலவும் அதிருப்தி காரணமாக டிடிவி தினகரனால் அரசியல் செய்ய முடியாது என இவர்கள் நினைத்தனர்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கே டெல்லி தரப்பு ஆதரவு இருந்து வந்தது. எனவே ஆட்சியை அவர்களால்தான் நடத்த முடியும் என மெஜாரிட்டியான மாநில நிர்வாகிகளும் கருதினர். ஆனால் இவர்களில் பலரும் ஷாக் ஆகிற மாதிரி, ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். மதுரை, மேலூரில் டிடிவி தினகரனின் புதிய கட்சி தொடக்க விழாவுக்கும் நேற்று (மார்ச் 15) பெரும் கூட்டம் திரண்டது.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இதை சீரியஸான ஒரு விஷயமாக பார்க்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்திற்காக நேற்று சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம் முடிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சீனியர் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோர் அங்கு தனியாக ஆலோசனை நடத்தினர்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்தபிறகு இரவு 10 மணி வரை இவர்கள் அங்கு ஆலோசனை நடத்தினர். அப்போது டிடிவி தினகரனுக்கு திரண்ட கூட்டம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. டிடிவி தினகரன் அணியில் இணைந்து பதவியிழந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாமல், தினகரன் ஆதரவாளர்களாக செயல்படும் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதன் காரணமாக இடைத்தேர்தல் வந்தால் அதை ஆளும்கட்சி எதிர்கொள்வது சிரமம் என்றும் பேசப்பட்டதாக தகவல்! ஒவ்வொரு மாவட்டத்திலும் டிடிவி ஆதரவாளர்கள் சராசரியாக 200 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. இதில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு இடையே தீர்மானமான ஒரு உடன்பாட்டுக்கு வர இயலவில்லை என்றே தகவல்!
அதிமுக.வில் கூட்டுத் தலைமை ஒத்து வராது என ஒரு தரப்பு அழுத்தி வருவதாக தெரிகிறது. தொண்டர்கள் மூலமாக வாக்களித்து பொதுச்செயலாளரை தேர்வு செய்தால்தான் கட்சியை கட்டுக்கோப்பாக நடத்த முடியும் என ஒபிஎஸ் தரப்பு கருதுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில், ‘அம்மாதான் நிரந்தர பொதுச்செயலாளர். இனி அதிமுக.வுக்கு கூட்டுத் தலைமைதான்’ என குறிப்பிட்டு வருகிறார்கள். இந்த விவகாரங்களும் அலசப்பட்டிருக்கின்றன.
‘ஒற்றைத் தலைமைக்கு கீழே அடிமையாக இருக்க முடியாது. அப்படி இருப்பதாக இருந்தால் நாங்கள் டிடிவி-யிடமே போய்விடலாம்’ என இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் கூறுகிறார்களாம். இது போன்ற பல சர்ச்சைகள் கட்சிக்குள் ஓடுவதால்தான் இரவு 10 மணி வரை ஆலோசித்திருக்கிறார்கள்.
ஆனாலும் கடைசியாக டிடிவி தினகரனின் கொடியை மட்டும் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என முடிவெடுத்து, அதை உடனடியாக அமல்படுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரில் இது தொடர்பாக ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதிமுக கொடியில் உள்ள எம்.ஜி.ஆர் படத்திற்கு பதிலாக டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கொடியில் ஜெயலலிதா படம் இடம் பெறுகிறது. இதில் எடப்பாடிக்கு என்ன பிரச்னை என பலரும் கேள்வி எழுப்பலாம். இதில் உள்ள முக்கியமான பிரச்னை, டிடிவி தினகரன் அணியினரும் தொடர்ந்து பழைய அதிமுக கரை போட்ட வேஷ்டியை கட்ட முடியும். காரணம், படத்தில்தான் இரு கட்சிகளின் கொடிகளுக்கும் வேறுபாடே தவிர வண்ணத்தில் அல்ல!
இதனால் தேர்தல் களங்களில் அதிமுக.வினருக்கும், டிடிவி அணியினருக்கும் வேறுபாடு தெரியாத அளவில் இரு தரப்பும் ஒரே வண்ண கரை போட்ட வேஷ்டி அணிந்திருப்பார்கள். இந்தக் குழப்பத்தை நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு முறையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இது சிவில் வழக்கு என்பதால், உடனடியாக எந்த உத்தரவும் வர வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.