நீட் தேர்வை எதிர்த்து போராடியஅன்பு மகள் அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மன வேதனை அளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியவர் மாணவி அனிதா. அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளான அணிதா, பன்னிரெண்டாம் வகுப்பில் 1,176 மதிப்பெண்களும், 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்றவர். ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தார்.
நீட் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, தன்னை எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்ட அனிதா, நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தினால், தம்மைப்போன்ற கிராமப்புற மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாது என தொடர்ந்து போராடி வந்தார். ஆனால், நீட் அடிப்படையில் தமிழக அரசு கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பினால் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்த மாணவி அனிதா, இன்று தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். அனிதாவின் உயிரிழப்புக்கு மத்திய - மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதேபோல், மாணவர்கள் இதுபோன்று தற்கொலை முடிவுகளை எடுக்கக் கூடாது என பலரும் வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வை எதிர்த்து போராடியஅன்பு மகள் அனிதா தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த மன வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது என டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை எதிர்த்து போராடியஅன்பு மகள் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) 1 September 2017
மேலும், நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளாரே என்று அனிதாவின் துணிச்சலை எண்ணி மகிழ்ந்திருந்தேன் என தெரிவித்துள்ள டிடிவி தினகரன், இத்தகைய முடிவை அனிதா எடுப்பார் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.