டிடிவி.தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி, சபாநாயகரிடம் அரசு கொறடா கொடுத்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் அம்சங்கள் தெரிய வந்துள்ளன.
டிடிவி.தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என குறிப்பிட்டு தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவிடம் மனு கொடுத்தனர். ‘ஆட்சியை கவிழ்ப்பது எங்களது நோக்கம் இல்லை. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றவேண்டும்’ என அவர்கள் பேட்டியும் கொடுத்தனர்.
இப்படி முதல்வர் மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் மீது அந்த மாநில சட்டமன்ற சபாநாயகர் கட்சி தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுத்ததையும், உச்சநீதிமன்றம் அந்த நடவடிக்கையை ரத்து செய்ததையும் தங்கள் மனுவில் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் குறிப்பிட்டனர். எனவே தமிழகத்திலும் தங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்பது அவர்களின் நிலைப்பாடாக இருந்தது.
கொறடா கடிதம்
ஆனால் ஆகஸ்ட் 24 (இன்று) காட்சிகள் அதிரடியாக மாறின. காலை 11 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோட்டையில் சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு முடிந்த சிறிது நேரத்தில் அதிமுக எம்.எல்.ஏ.வும், அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலை சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தார்.
தாமரை ராஜேந்திரன் தனது கடிதத்தில், ‘14-02-2017 அன்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கூடி எடுத்த ஒருமித்த முடிவுக்கு எதிராக 19 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சருக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுனரிடம் கடிதம் கொடுத்ததாக ஊடகங்கள் மூலமாக அறிந்தோம். மேலும் ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்துள்ளனர். இது கட்சி விரோத நடவடிக்கை. இதன் மூலமாக தான் சார்ந்த கட்சியின் உறுப்பினர் பதவியை தாங்களாகவே விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.
கடிதத்தில் குறிப்பிட்ட டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் பட்டியல்
எனவே இந்திய அரசமைப்புச் சட்டம் 10-வது அட்டவணையின்படி இவர்கள் தகுதியின்மைக்கு ஆளாகிறார்கள். 1986-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் விதி (கட்சி மாறுதல் அடிப்படையாக தகுதி நீக்குதல்) பிரிவு 6-ன் கீழ் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். மேற்கண்ட உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்’ என தனது செய்தி குறிப்பில் தாமரை ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.
அவர் பட்டியல் இட்டுள்ள டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் இவர்கள்தான் 1. ஏழுமலை (பூந்தமல்லி-தனி), 2.வெற்றிவேல்(பெரம்பூர்), 3.என்.ஜி.பார்த்தீபன் (சோளிங்கர்), 4.ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்-தனி), 5.பாலசுப்பிரமணி (ஆம்பூர்), 6.பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி), 7.கோதண்டபாணி (திருப்போரூர்), 8.முருகன் (அரூர்-தனி), 9.தங்கதுரை (நிலக்கோட்டை-தனி), 10.செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), 11.ரங்கசாமி (தஞ்சாவூர்), 12.மாரியப்பன் கென்னடி (மானாமதுரை-தனி), 13.தங்க தமிழ்செல்வன் (ஆண்டிப்பட்டி), 14.கதிர்காமு (பெரியகுளம்-தனி), 15.எஸ்.டி.கே.ஜக்கையன் (கம்பம்), 16.எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்), 17.முத்தையா (பரமக்குடி-தனி), 18.உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்), 19.சுந்தர்ராஜ் (ஓட்டப்பிடாரம்-தனி).
‘கொறடாவின் பணி என்பது சட்டமன்றத்தின் உள்ளே மட்டும்தான். கவர்னரிடம் மனு கொடுத்த காரணத்திற்காக எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்வது, உச்சநீதிமன்றத்தை அவமதிப்பது போன்றது. இதை சட்டரீதியாக சந்திப்போம்’ என இது குறித்து பாண்டிச்சேரியில் பேட்டியளித்த தங்க தமிழ்செல்வன் கூறினார்.