டிடிவி.தினகரன் அணி 19 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் : நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவாரா கவர்னர்?

டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடவேண்டிய நெருக்கடி கவர்னருக்கு ஏற்பட்டிருக்கிறது.

டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆதரவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடவேண்டிய நெருக்கடி கவர்னர் வித்யாசாகர்ராவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையின்மையை தெரிவித்து ஆளுனர் வித்யாசாகர்ராவிடம் தனித்தனியாக ஆகஸ்ட் 22 அன்று மனு கொடுத்தனர். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தின் இப்போதைய பலம் 233. இவர்களில் 98 பேர் எதிர்கட்சியினர்(திமுக 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1). எஞ்சிய 135 பேரில் சபாநாயகர் தனபாலைத் தவிர, 134 எம்.எல்.ஏ.க்கள் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது, ஓ.பன்னீர்செல்வம் அணியின் 12 எம்.எல்.ஏ.க்கள், மைலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் ஆகியோரின் ஆதரவு அரசுக்கு கிடைக்கவில்லை. எஞ்சிய 121 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் எடப்பாடி அரசு தப்பியது. தற்போது அதிமுக இணைப்பைத் தொடர்ந்து அந்த 13 எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு சாதகமாக திரும்பியிருக்கிறார்கள்.

ஆனால் சாண் ஏறினால், முழம் சறுக்கிய கதையாக டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி, கடிதம் கொடுத்திருக்கிறார்கள். இதனால் அரசுக்கு ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை மெஜாரிட்டிக்கு தேவையான 117-க்கும் குறைந்துவிட்டது.

தவிர, இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்தவர்களான தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் தங்கள் நிலைப்பாடை இன்னும் தெரிவிக்க வில்லை. டிடிவி.தினகரனையும் அழைத்து எடப்பாடி பழனிசாமி சமரசம் செய்ய வேண்டும் என்கிற கருத்தை இவர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். அண்மை காலமாக பொதுப் பிரச்னைகளில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இவர்கள் இணக்கமாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. எனவே இவர்களும் ஆதரவை வாபஸ் பெற்றால், அரசுக்கு ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 112 ஆகிவிடும்.

ஒரு ஆளுனரின் மிக முக்கியமான அரசமைப்புச் சட்டக் கடமையே, அந்த மாநில அரசு மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று இயங்குகிறதா? என்பதை கண்காணிப்பதுதான். எனவே தமிழக கவர்னர் தனது அரசியல் சட்டக் கடமையை நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.

19 எம்.எல்.ஏ.க்களையும் ஆகஸ்ட் 22-ம் தேதி கவர்னர் வித்யாசாகர்ராவ் நேரடியாக சந்தித்து கடிதங்களை பெற்றாரா? அல்லது, கவர்னர் மாளிகையில் மனுவை கொடுக்க வைக்கப்பட்டார்களா? என்பதுகூட இதுவரை அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

முன்தினம் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்திற்கும், புதிய அமைச்சராக மாஃபாய் பாண்டியராஜனுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க சென்னைக்கு வந்தார் வித்யாசாகர்ராவ். அங்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைகளையும், ஓ.பன்னீர்செல்வம் கைகளையும் இணைத்து வைத்தபடி அவர் போட்டோவுக்கு காட்சி கொடுத்ததே சர்ச்சை ஆகியிருக்கிறது. இந்தச் சூழலில் 19 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்த அடுத்த சில நிமிடங்களில் ஆளுனர் வித்யாசாகர்ராவ், மும்பைக்கு பறந்துவிட்டார்.

இந்தச் சூழலில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் பலரும், ‘உடனடியாக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த பிப்ரவரியில் இதேபோல அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு முன்பும், சசிகலாவை சட்டமன்றக் கட்சித் தலைவராக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்த தருணத்திலும் வித்யாசாகர்ராவ், மும்பையில் இருந்துகொண்டார். அப்போது துரைமுருகன் உள்ளிட்ட திமுக தலைவர்கள் மும்பைக்கு சென்று ஆளுனரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்போதும் அதேபோல எதிர்கட்சியினர் மும்பைக்கு சென்று ஆளுனருக்கு அழுத்தம் கொடுக்கும் சூழல் உருவாகும் எனத் தெரிகிறது. ஓ.பி.எஸ். அணியின் 12 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றபோதே எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை வாக்கு கோரும்படி கூறிய கவர்னர், இப்போது 19 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்திருப்பதால் அதை தவிர்க்க முடியாது என்றே தெரிகிறது.

கட்சித் தாவல் தடை சட்டப்படி, மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக பிரிந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் 2011-ம் ஆண்டு கர்நாடகாவில் எடியூரப்பா மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில், ‘அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வேறு, முதல்வரை மாற்றவேண்டும் என கட்சியினர் கோருவது வேறு’ என சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

அந்த ‘டெக்னிக்கல் பாயின்ட்’டை முன்னிறுத்தியே, டிடிவி.தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி மீது மட்டுமே நம்பிக்கை இல்லை என கூறியிருக்கிறார்கள். இதனால் எடப்பாடிக்கு மட்டுமல்ல, ஆளுனருக்கும் இதில் உடனே முடிவெடுக்க வேண்டிய நெருக்கடி!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close