டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ 15 கோடி வரை பேரம் பேசியதாக தமிழக போலீஸ் அதிகாரிகள் மீது செந்தில்பாலாஜி புகார் கூறினார்.
அதிமுக அணிகளின் யுத்தம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து செப்டம்பர் 12-ம் தேதி நடத்திய பொதுக்குழுவில், சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கினர். டிடிவி.தினகரன் கட்சியில் செய்த நியமனங்கள் எதுவும் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.
இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய டிடிவி.தினகரன், ‘இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை தொடங்கிவிட்டேன்’ என கூறினார். இதனால் எடப்பாடி பழனிசாமி - டிடிவி.தினகரன் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.
டிடிவி.தினகரன் அணியில் 21 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருக்கிறார்கள். மேற்படி 21 எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என கவர்னர் வித்யாசாகர் ராவிடமும் மனு அளித்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திமுக எடப்பாடி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். எனவே ஆட்சியை தக்கவைக்க டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களில் சிலரையாவது இழுக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி தரப்பு இருக்கிறது.
இந்தச் சூழலில் அதிமுக பொதுக்குழு நடைபெற்ற செப்டம்பர் 12-ம் தேதி பிற்பகலில் தமிழக சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் ரகசியமாக கர்நாடகாவில் முகாமிட்டனர். டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டிருக்கும் விடுதிக்கு சென்ற அவர்கள், டிடிவி அணி எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. குறிப்பாக நாமக்கல் காண்ட்ராக்டர் சுப்பிரமணியன் மர்ம மரணம் தொடர்பாக பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ. பழனியப்பனிடம் விசாரிக்க அவர்கள் சென்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் அப்போது பழனியப்பன் அங்கு இல்லை.
இந்த நிலையில் போலீஸாரின் அந்த விசாரணை குறித்து கர்நாடகாவில் முகாமிட்டிருக்கும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி இன்று (செப்டம்பர் 13) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றவேண்டும் என்கிற எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. டிடிவி.தினகரன் என்ன முடிவு எடுக்கிறாரோ, அதன்படியே நாங்கள் செயல்படுவோம்.
தமிழக ஆளுனர் ஏற்கனவே நாங்கள் கொடுத்த கடிதம் மீது உரிய நடவடிக்கை எடுப்பார் என எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. கவர்னர் மீது நம்பிக்கை இருப்பதால், நாங்கள் ஜனாதிபதியை சந்திக்கவில்லை. நேற்றும், இன்றும் தமிழக போலீஸார் இங்கு வந்து எங்களை மோசமாக நடத்தியிருக்கிறார்கள்.
எனது அறைக்கே வந்து, ‘முதலமைச்சருடம் நீங்கள் பேசவேண்டும். இல்லாவிட்டால் வழக்குகளை எதிர் கொள்ளவேண்டியிருக்கும். கைது நடவடிக்கையும் எடுப்போம்’ என மிரட்டினார்கள். தமிழக போலீஸார் இந்த அளவுக்கு மிரட்டுவது வேதனையாக இருக்கிறது. பிறகு, ‘உங்களுக்கு என்ன வேணும்? 10 கோடி, 15 கோடி வரை நாங்கள் பெற்றுத் தருகிறோம்’ என்று பேரமும் பேசினார்கள். இந்த அத்துமீறல் குறித்து உள்ளூர் போலீஸாரிடம் புகார் கொடுக்கிறோம்’ என்றார் அவர்.
‘செப்டம்பர் 14-ம் தேதி 19 எம்.எல்.ஏ.க்கள் நேரில் ஆஜராக வேண்டும் என சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாரே?’ என அவரிடம் கேட்டபோது, ‘சபாநாயகரிடம் நாங்கள் ஏற்கனவே விளக்கம் கொடுத்திருக்கிறோம். சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டு, அதில் முடிவெடுப்போம்’ என்றார் செந்தில்பாலாஜி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.