டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் பாண்டிச்சேரியில் இருந்து கர்நாடகாவுக்கு இடம் மாறினர். இதன் மூலமாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
அதிமுக அணிகளின் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து செப்டம்பர் 12-ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டுகிறார்கள். அன்று காலை 10.35 மணிக்கு சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாச்சலபதி மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது.
இதில் சசிகலாவை தொடர்ந்து பொதுச்செயலாளராக நீடிக்க விடாதபடி தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக டிடிவி.தினகரன் நியமனத்தையும் நிராகரிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இபிஎஸ், ஓபிஎஸ் அணிகளின் இந்த நடவடிக்கைக்கு ‘செக்’ வைக்கும் விதமாக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை முடுக்கி விட்டிருக்கிறார் டிடிவி.தினகரன்.
அவரது அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆகஸ்ட் 22-ம் தேதி ராஜ்பவனில் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்தனர். தொடர்ந்து டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் பாண்டிச்சேரியில் முகாமிட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடும்படி கவர்னருக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன.
திமுக சார்பில் ஆகஸ்ட் 31-ம் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து இது தொடர்பாக மனு கொடுத்தனர். ஆனாலும் இதுவரை கவர்னர் வித்யாசாகர் ராவ் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையே செப்டம்பர் 7-ம் தேதி டிடிவி.தினகரன் அணி சார்பில் திருவாடனை கருணாஸ், அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் புதிதாக கவர்னரிடம் மனு கொடுத்தார்கள்.
டிடிவி.தினகரனே இவர்களை அழைத்துச் சென்று கவர்னரிடம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வலியுறுத்தினார். இதனால் முதல்வர் மீது நம்பிக்கை இல்லாத எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 22 ஆனது. இதன் மூலமாக கவர்னர் மீதான அழுத்தம் இன்னும் அதிகமாகியிருக்கிறது. இதற்கிடையே டிடிவி.தினகரன் அணியில் இருந்து கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் நேற்று இபிஎஸ் அணிக்கு தாவினார். மேலும் சில எம்.எல்.ஏ.க்களையும் இழுக்க இபிஎஸ் தரப்பு களம் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இதைத் தடுக்கும் விதமாக டிடிவி.தினகரன் தரப்பினர் நேற்று இரவு தங்கள் அணி எம்.எல்.ஏ.க்களை பாண்டிச்சேரியில் இருந்து கர்நாடகாவுக்கு மாற்றினர். பாண்டிச்சேரியில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களை இபிஎஸ் தரப்பு சுலபமாக தொடர்பு கொண்டு பேசும் நிலையில் இருந்ததாலேயே இந்த இடமாற்றம் என்கிறார்கள். தவிர, எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் தங்க வைத்தால், அவர்களுக்கே சுவாரசியம் இருக்காது என்பதற்காகவும் இந்த இடமாற்றமாம்!
புதுவையில் தங்கியிருந்தபோது, தினமும் தமிழ் மீடியா அங்கு முகாமிட்டு டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களை பேட்டி என்ற பெயரில் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். கர்நாடகாவுக்கு சென்றால், அந்தத் தொல்லையில் இருந்தும் தப்பிக்கலாம் என டிடிவி தரப்பினர் முடிவு செய்திருக்கிறார்கள். கர்நாடகாவில் எழில் மிகுந்த மைசூரு ஏரியாவில் இவர்களுக்கு சொகுசு விடுதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அங்கிருந்து காவிரி உற்பத்தியாகும் குடகு பகுதிகளில் சுற்றுலா சென்று வரவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதுடன், விரைவில் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பாக முறையிட டிடிவி.தினகரன் முயற்சித்து வருகிறார். நீதிமன்றத்தை அணுகுவது குறித்தும் அவரது தரப்பில் ஆலோசித்து வருகிறார்கள். இதற்கிடையே முதலில் கவர்னரிடம் கடிதம் கொடுத்த டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் செப்டம்பர் 14-ம் தேதி தன்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதை சட்டரீதியாக தவிர்ப்பது குறித்தும் டிடிவி அணி ஆலோசித்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.