டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்வு : எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்.ஸுக்கு பதிலடி

டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்திருக்கிறது. இதன் மூலமாக இபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்திருக்கிறது. இதன் மூலமாக இபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

டிடிவி.தினகரன் அணியில் 19 எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றிருந்தார்கள். இவர்கள் அனைவரும், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என கவர்னர் வித்யாசாகர்ராவிடம் மனு கொடுத்தனர். தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கவர்னர் உத்தரவிடக்கூடும் என எதிர்பார்த்து, இவர்கள் பாண்டிச்சேரியில் தங்கியிருக்கிறார்கள்.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த விஷயத்தில் அதிரடியாக காய் நகர்த்தி வருகிறார்கள். இவர்கள் 19 பேர் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி ஆகஸ்ட் 24-ம் தேதி அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுத்தார். அதன் பேரில் 19 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதேபோல, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் மீதான உரிமை மீறல் பிரச்னையும் ஆகஸ்ட் 28 அன்று விசாரிக்கப்படுகிறது. எனவே சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதாக இருந்தாலும், திமுக மற்றும் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் மொத்தம் 40 பேர் வரை வாக்களிக்க முடியாத சூழல் ஏற்படலாம்.

ஆனால் இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் டிடிவி.தினகரன் அணிக்கு எம்.எல்.ஏ.க்களின் வருகை அதிகரித்தபடி இருக்கிறது. ஆகஸ்ட் 24-ம் தேதி அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, டிடிவி.தினகரனை சந்தித்து ஆதரவு கொடுத்தார். ஆகஸ்ட் 25-ம் தேதி விருதாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள டிடிவி.தினகரனின் இல்லத்திற்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார். இதனால் டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 21 ஆனது.

டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் இவர்கள்தான்.
1. ஏழுமலை (பூந்தமல்லி-தனி), 2.வெற்றிவேல்(பெரம்பூர்), 3.என்.ஜி.பார்த்தீபன் (சோளிங்கர்), 4.ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்-தனி), 5.பாலசுப்பிரமணி (ஆம்பூர்), 6.பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி), 7.கோதண்டபாணி (திருப்போரூர்), 8.முருகன் (அரூர்-தனி), 9.தங்கதுரை (நிலக்கோட்டை-தனி), 10.செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), 11.ரங்கசாமி (தஞ்சாவூர்), 12.மாரியப்பன் கென்னடி (மானாமதுரை-தனி), 13.தங்க தமிழ்செல்வன் (ஆண்டிப்பட்டி), 14.கதிர்காமு (பெரியகுளம்-தனி), 15.எஸ்.டி.கே.ஜக்கையன் (கம்பம்), 16.எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்), 17.முத்தையா (பரமக்குடி-தனி), 18.உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்), 19.சுந்தர்ராஜ் (ஓட்டப்பிடாரம்-தனி), 20.ரத்தினசபாபதி (அறந்தாங்கி), 21. கலைச்செல்வன் (விருத்தாச்சலம்).

சபாநாயகரின் நோட்டீஸ் நடவடிக்கைக்கு பிறகும், எம்.எல்.ஏ.க்கள் டிடிவி.தினகரன் அணியை நோக்கித் தாவியது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். ஆகியோருக்கு ஷாக்! இது டிடிவி.தினகரன் அணியின் பதிலடியாக பார்க்கப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close