முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கர்நாடகா நீதிமன்றத்தில் வழக்கு தொடர டிடிவி.தினகரன் திட்டமிட்டிருக்கிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திணறடிக்க டிடிவி.தினகரன் அணியினர் வெவ்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்த டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் ஆரம்பத்தில் பாண்டிச்சேரியில் முகாமிட்டனர். அங்கு ஆளும்தரப்பு நெருக்கடிகளை அதிகரித்ததும், கர்நாடகாவுக்கு இடம் மாறினர்.
ஆனால் சென்னையில் பொதுக்குழு கூடிய செப்டம்பர் 12-ம் தேதி பிற்பகலில் தமிழக போலீஸ் அதிகாரிகள் சிலர் கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் டிடிவி.தினகரன் அணியினர் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற விவகாரம் இப்போது பூமராங் ஆகியிருக்கிறது. நாமக்கல் காண்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை செய்த வழக்கில் பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ. பழனியப்பனிடம் விசாரிக்கும் சாக்கில்தான் மேற்படி போலீஸ் அதிகாரிகள் அங்கு போயிருக்கிறார்கள். ஆனால் அங்கு அவர்கள் தேடிச்சென்ற பழனியப்பன் இல்லை. டிடிவி.தினகரன் அடிக்கடி குறிப்பிடும் ‘ஸ்லீப்பர் செல்’ கொடுத்த தகவல் அடிப்படையில் அவர் ‘எஸ்கேப்’ ஆகிவிட்டதாக தெரிகிறது.
ஆனால் குடகுக்கு சென்ற தமிழக போலீஸார் வெறும் கையுடன் திரும்ப விரும்பாமல், டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களை மணிக்கணக்கில் ‘பிரெயின்வாஷ்’ செய்ததாக தெரிகிறது. செப்டம்பர் 12-ம் தேதி பிறபகல் 2 மணியளவில் எம்.எல்.ஏ.க்கள் தங்கிய விடுதிக்கு சென்ற போலீஸார், இரவில்தான் அங்கிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இந்த அவகாசத்தில்தான் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. உள்ளிட்டோரை அணி மாறும்படி போலீஸார் நிர்ப்பந்தப்படுத்தியதாக கூறுகிறார்கள். இது தொடர்பாக செப்டம்பர் 13-ம் தேதி பிற்பகலில் பேட்டி கொடுத்த செந்தில்பாலாஜி, மாலையிலேயே உள்ளூர் போலீஸில் புகாரும் கொடுத்தார். அதாவது, போலீஸ் துறை அமைச்சரான எடப்பாடி பழனிசாமி தூண்டுதலில் போலீஸ் அதிகாரிகள் தங்களை அச்சுறுத்தியதாகவும், மிரட்டியதாகவும், பேரம் பேசியதாகவும் அவர்கள் தங்களின் புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த விவகாரம் குறித்து இரவு வரை குடகு போலீஸார் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி ஆகியோரிடம் விசாரித்தனர். இவர்கள் தங்கியிருக்கும் விடுதியின் உரிமையாளரையும் அழைத்து போலீஸார் விவரங்களை கேட்டனர்.
இந்தப் புகாரின் பின்னணி குறித்து டிடிவி.தினகரன் அணியினரிடம் கேட்டபோது, “தமிழக போலீஸார் சம்பந்தமே இல்லாமல் இந்த விடுதிக்கு வந்து தொந்தரவு செய்தது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் ஆதாரங்களாக இருக்கின்றன. இது தொடர்பாக கர்நாடகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்? என்பதை பார்ப்போம்.
இல்லாதபட்சத்தில், நாங்கள் கொடுத்த புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி கர்நாடகா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். இதைத்தான் சென்னையில் பேட்டியளித்த டிடிவி.தினகரன், ‘போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர்வோம்’ என அறிவித்தார். அது விரைவில் நடக்கும்.” என்றார்கள் அவர்கள்.
அதிமுக விவகாரம், தமிழகத்தைத் தாண்டி கர்நாடகாவிலும் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது.