நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவியை டிடிவி தினகரன் நேரில் வழங்கினார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு போராடிய அனிதா, நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் ஆங்கங்கே தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் அனிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தினகரன், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரியும், அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் திருச்சி உழவர் சந்தையில் பொதுக் கூட்டம் ஒன்றையும் நடத்தினார்.
இந்நிலையில், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு, ஆதரவு எம்எல்ஏக்களின் ஒருமாத ஊதியம், கட்சி நிதி ரூ.5 லட்சம் சேர்த்து ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என டிடிவி தினகரன் அறிவித்தார். அதன்படி, அனிதாவின் சொந்த ஊரான குழுமூருக்கு நேரில் சென்ற டிடிவி, அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவியை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் உடனிருந்தார்.
நிதியுதவியை பெற்றுக் கொண்ட அனிதாவின் சகோதரர் மணிரத்தினம், கட்சிகள் இல்லையென்றால் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு விடும். தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசும் போது, அரசியல் ஆதாயத்துக்காக அனிதாவின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை. எங்கள் வீட்டு பெண்ணுக்கு நடந்த நிகழ்வாகவே இதை பார்க்கிறோம். இது போன்றதொரு கொடூர சம்பவம் இனிமேல் தமிழகத்தில் நடந்து விடக் கூடாது. நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை. தமிழக மக்களின் பிரச்னைக்கு அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக, அனிதா மரணத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நிதியுதவியை ஏற்றுக்கொள்ள அனிதா குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்றபின்னர் அரசு நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதாகக் கூறினர். அதேசமயம், திமுக சார்பில் வழங்கப்பட்ட நிதியுதவியை அனிதா குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.