TTV Dhinakaran Latest News: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை திடீரென டெல்லிக்கு கிளம்பிச் சென்றார். பயணிகள் விமானத்தை தவிர்த்து, தனி விமானத்தில் அவர் பயணித்தது பரவலாக விவாதங்களை கிளம்பியிருக்கிறது. முக்கிய அரசியல் சந்திப்புகளை அவர் நிகழ்த்த இருப்பதாக கூறப்படுகிறது.
டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்திய அந்தக் கட்சிக்கு, எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
டிடிவி தினகரனின் சித்தியும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியுமான வி.கே.சசிகலா, ஜனவரி மாதம் பெங்களூரு சிறையில் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்னடத்தை அடிப்படையில் அதற்கு முன்பாகவே விடுதலை ஆகும் வாய்ப்பு இருப்பதாக சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறி வருகிறார்.
சசிகலா வெளியே வந்ததும், அதிமுக அரசியலில் என்ன விதமான தாக்கம் உருவாகும் என்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் டிடிவி தினகரன் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து தனி சார்ட்டட் விமானத்தில் டெல்லிக்கு கிளம்பினார். இந்தத் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
வழக்கமான பயணிகள் விமானத்தை தவிர்த்து, தனி விமானத்தில் டிடிவி தினகரன் டெல்லி சென்றிருப்பது இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருக்கிறது. டிடிவி தினகரன் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்குகளில் அவருக்காக காங்கிரஸ் தலைவர் அபிஷேக்மனு சிங்வி ஆஜரானார். சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக அவரிடம் ஆலோசிக்க டிடிவி தினகரன் செல்வதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
ஆனால் இன்னொரு தரப்பினரோ, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞரை சந்திப்பதாக இருந்தால் டிடிவி தினகரன் வெளிப்படையாக விமான நிலையத்தில் ஒரு பேட்டியை கொடுத்துவிட்டே சென்றிருப்பார் என்கிறார்கள். எனவே இது பெரும் அரசியல் மாற்றத்தை நோக்கிய ஒரு சந்திப்பு என ஆரூடம் கூறுகிறார்கள், உள் நிலவரங்களை தெரிந்த சிலர்.
இது குறித்து மேலும் நாம் விசாரித்தபோது, ‘முழுக்க பாஜக தயவிலேயே இபிஎஸ்- ஓபிஎஸ் அணியினர் அதிமுக.வை கையகப்படுத்தினர் என்பதை டிடிவி தினகரன் நன்கு அறிவார். அந்தக் கோபத்திலேயே முன்பு ஒருமுறை 25 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பாஜக.வை காலூன்ற விடமாட்டேன் என சபதம் எடுத்தார்.
ஆனால் இப்போது அவரது அமைப்பை காலூன்றச் செய்வது அல்லது அதிமுக.வை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அவருக்கு முக்கியத் தேவையாக இருக்கிறது. மத்தியில் அதிகாரத்தில் இருக்கிறவர்களை பகைத்துக் கொண்டு இது சாத்தியமல்ல என்பதை அண்மைக் காலமாக தினகரன் உணர்ந்திருப்பதாக தெரிகிறது. அவரது பாஜக எதிர்ப்பு நிலையிலும் சமீபகாலமாக காரம் இல்லை.
டெல்லியில் ஓரளவு செல்வாக்கு உடைய தமிழக பாஜக தலைவர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாகவே சசிகலா- டிடிவி தினகரனுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவர் மூலமாக சில டெல்லி சோர்ஸ்களை பிடித்து, பாஜக முக்கியத் தலைவர்களை டிடிவி தினகரன் நெருங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த டெல்லிப் பயண நோக்கமே அந்த உறவை வலுப்படுத்துவதுதான்’ எனக் கூறி அதிர வைக்கிறார்கள், நம்மிடம் தகவல் கூறியவர்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக தனது கூட்டணி பலத்தை அதிகரிக்க விரும்புகிறது. எனவே தன்னைத் தேடி வருகிற எந்தத் தலைவரையும் அது அலட்சியப் படுத்துவதில்லை. அந்த வகையில் டிடிவி தினகரனையும் பாஜக இருகரம் கூப்பி வரவேற்கவே செய்யும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக.வுக்கு வெறும் 5 சீட்களை மட்டும் அதிமுக ஒதுக்கியது, தேசிய ஜனநாயகக் கூட்டணி என்கிற பெயரையே தமிழக பிரசாரக் களத்தில் அதிமுக தலைவர்கள் தவிர்த்தது ஆகியன பாஜக மேலிடத் தலைவர்களுக்கு இன்னும் நெருஞ்சி முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. எனவே அதிமுக.வை உதறிவிட்டு, மாற்று அணியை கட்டமைக்க அவர்கள் தயாரானால், அது பெரிய ஆச்சர்யம் அல்ல.
அரசியலில் எதுவும் சாத்தியமே என்கிற பதத்திற்கு டிடிவி தினகரன் மட்டும் விலக்காகிவிட முடியுமா என்ன?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.