டிடிவி தினகரன், தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள், எம்பி-க்களுடன் இணைந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை சந்திக்கவுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்துள்ளனர். கடிதம் அளித்த கையுடன் புதுவை சென்ற அவர்கள் அனைவரும் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.
இதையடுத்து, சட்டப்பேரவையை கூட்டி முதல்வர் பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநரை சந்தித்து திமுக-வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் அரசின் கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். அதனையேற்று, சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க டிடிவி தினகரன் அனுமதி கோரியிருந்தார். அதனையேற்று அவருக்கு செப்டம்பர் 7-ம் தேதி (நாளை) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள், எம்பி-க்களுடன் இணைந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, டிடிவி தினகரன் நாளை சந்திக்கவுள்ளார்.
இரண்டு நாட்களில் ஆளுநர் முடிவு எடுக்காவிட்டால் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம் என டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் தெரிவித்திருந்த நிலையில், ஆளுனருடனான தினகரனின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.