டிடிவி.தினகரன், செந்தில்பாலாஜி, பழனியப்பன் கைது? எடப்பாடி பழனிசாமி அடுத்த ‘மூவ்’

டிடிவி.தினகரன், செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம். எடப்பாடி பழனிசாமி தரப்பின் அடுத்த ‘மூவ்’ இது!

By: September 18, 2017, 4:45:02 PM

டிடிவி.தினகரன், செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம். எடப்பாடி பழனிசாமி தரப்பின் அடுத்த ‘மூவ்’ இது!

டிடிவி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசியல் சூடு பிடித்திருக்கிறது. இந்தத் தருணத்தில் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், எடப்பாடி பழனிசாமி அரசு சுலபமாக ஜெயித்துவிடும். ஆனால் வருகிற 20-ம் தேதி இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பிக்க இருக்கும் உத்தரவுகளைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்.

இதற்கிடையே போலீஸ் மூலமாகவும் டிடிவி.தினகரன் அணியினருக்கு நெருக்கடியை அதிகரித்தபடியே இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பே தமிழக போலீஸார், கர்நாடகாவில் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது டிடிவி அணி எம்.எல்.ஏ.க்கள் யாரும் போலீஸாருடன் தமிழகம் திரும்ப விரும்பவில்லை. தமிழக போலீஸார் அத்துமீறி நடந்துகொண்டது குறித்து கர்நாடக போலீஸிலும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

ஆனாலும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல், அடுத்தகட்ட பாய்ச்சலை போலீஸ் தொடங்கியிருக்கிறது. அதாவது, வெவ்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கும் டிடிவி அணியினரை கைது செய்வதுதான் அந்தத் திட்டம்! டிடிவி அணியின் பிரதான தளகர்த்தர்களில் ஒருவராக வலம் வருபவர் முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜி. இவர்தான் கர்நாடக போலீஸில், தமிழக போலீஸார் மீது எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தவர்!

ஜெயலலிதாவின் கடந்த ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. அப்போது இவரது பெயரை பயன்படுத்தி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடி நடந்ததாக தெரிகிறது. மொத்தம் நான்கேகால் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக இரு வழக்குகளை செந்தில்பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது போலீஸார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தனர்.

அந்த வழக்குகளின் அடிப்படையில் செந்தில்பாலாஜியை கைது செய்ய போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக தனிப்படைகள் அமைத்து செந்தில்பாலாஜியை கைது செய்யும் நடவடிக்கையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.

அதேபோல டிடிவி அணியின் மற்றொரு தளகர்த்தரான பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ பழனியப்பன் மீது நாமக்கல் காண்ட்ராக்டர் சுப்பிரமணியனை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எந்த நேரத்திலும் பழனியப்பனும் கைது செய்யப்படலாம். இவரை கைது செய்யும் திட்டத்துடனேயே சில தினங்களுக்கு முன்பு தமிழக போலீஸார் கர்நாடக மாநிலத்திற்கு சென்று, டிடிவி அணியினர் தங்கியிருக்கும் விடுதியில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கிளைமாக்ஸாக டிடிவி.தினகரனையே கைது செய்யவும் போலீஸ் தயாராகி வருகிறது. அண்மையில் திருச்சி எம்.பி. குமார் கொடுத்த ஒரு புகாரின் அடிப்படையில் டிடிவி.தினகரன், நடிகர் செந்தில் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, டிடிவி.தினகரன் தூண்டுதலில் நடிகர் செந்தில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேட்டி கொடுத்ததாக அந்த வழக்கு பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கை மனதில் வைத்தே அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தினகரன் விரைவில் மாமியார் வீட்டுக்கு செல்வார்’ என குறிப்பிட்டதாக தெரிகிறது. அதற்கு பதிலடியாக டிடிவி.தினகரன் கொடுத்த பேட்டியில், ‘எடப்பாடிதான் மாமியார் வீட்டுக்கு செல்வார்’ என குறிப்பிட்டார். இது ஆளும் தரப்பை இன்னும் அதிகமாக கோபப்படுத்தியிருக்கிறது. எனவே டிடிவி.தினகரனும் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள்.

டிடிவி.தினகரனே கைதானால், கர்நாடகாவில் முகாமிட்டிருக்கும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிதறிவிட வாய்ப்பு உண்டு. அதை எதிர்பார்த்தே எடப்பாடி தரப்பு தங்களது நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது. ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க, எல்லா அஸ்திரங்களையும் பயன்படுத்த எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டதையே இது காட்டுகிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Ttv dhinakaran senthilbalaji palaniappan are to arrest edappadi government next move

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X