ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடுக: டிடிவி தினகரன்

சசிகலா நினைத்திருந்தால் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு, டிசம்பர் 5-ம் தேதி இரவே முதலமைச்சராகிருப்பார். ஆனால், சசிகலா அப்படி செய்யவில்லை.

சசிகலா நினைத்திருந்தால் என்னையோ அல்லது எங்களது குடும்பத்தை சார்ந்தவரையோ முதலமைச்சராக்கியிருக்க முடியும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு தினகரன் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம், மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்றது. டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 14 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசும்போது: சசிகலா நினைத்திருந்தால் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு, டிசம்பர் 5-ம் தேதி இரவே முதலமைச்சராகிருப்பார். ஆனால், சசிகலா அப்படி செய்யவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக, அன்றைக்கு ஒரு முதலமைச்சரை சுட்டிக்காட்டினார். அதன்பின்னர் நடந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியும்.

பின்னர், சகிகலாவால் முதலமைச்சராக முடியவில்லை என்பதும் உங்களுக்கு தெரியும். இக்கட்டான நிலையிலும், ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டார் சசிகலா.

சசிகலா முதல்வராகி இருக்கலாம்

அன்றைக்கு சசிகலா நினைத்திருந்தால் என்னையோ அல்லது எங்களது குடும்பத்தை சார்ந்தவரையோ முதலமைச்சராக்கியிருக்க முடியும். பதவிக்கு ஆசைப்படுபவர்கள் நாங்கள் அல்ல. அதனை தெரியாத புரியாத சில மூடர்கள், நாம் உருவாக்கிய இந்த ஆட்சிக்கு ஏதோ ஆபத்து வந்துவிடும் என்று பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

Sasikala

சகிகலா சிறைக்கு சென்ற பின்னர், அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து அவரது பேனரை கூட எடுத்துவிட்டார்கள். முன்னதாக, நிலவிய இக்கட்டான சூல்நிலையில், நாங்கள் அவர்களை கூவத்தூரிலேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தால், தற்போது அவர்கள் காரிலே பவனி சென்றிருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

என்னைப்பார்த்து 420 என்கிறார்

420 என்று என்னைப் பார்த்து ஒருவர் சொல்கிறார். இது நாம் உருவாக்கிய ஆட்சி. ஏதோ ஒரு 30 பேர் சேர்ந்து, தலைமைச் செயலகத்திலே இருந்து கொண்டு, இந்த இயக்கத்தை நடத்தி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தால், அது பூனை கண்களை மூடிக்கொண்டு இருண்டுவிட்டது என்று நினைப்பதற்குச் சமம்.

இங்கே வந்திருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என நினைத்து தான் வந்திருக்கின்றனர். இது நமது ஆட்சி, இந்த ஆட்சியை எந்த காரணத்தைக் கொண்டும் இழக்க வேண்டிய சூல்நிலை எங்களுக்கு ஏற்படாது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள், தங்களது மடியிலே கனம் உள்ளது என்ற பயத்தால் நீங்கள் வேண்டுமானால் நினைக்கலாம்.

பதவிக்கும், பொருளுக்கும் ஆசையில்லை

இங்கே வந்திருக்கின்றன சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்கும், பொருளுக்கும் ஆசைபடாமல் இயக்கம் தான் பெரியது எண்ணி வந்திருக்கின்றனர். இந்த கட்சியினால் தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்ற ஒரே காரணத்தினால் தான் இங்கே வந்திருக்கிறார்களே தவிர, யாருடைய அச்சுறுத்தலுக்கும், எந்த சுயலாபத்திற்காகவும் வரவில்லை.

சட்டமன்ற உறுப்பினர்கள் கடத்தல்

இன்றைக்குகூட, இங்கு வரவேண்டிய இரண்டு, மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை கடத்திச் சென்றுள்ளனர்.இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டியவர்களை தூக்கிக்கொண்டு சென்று, சென்னையில் மறைத்து வைத்திருக்கின்றனர். எம்.எல்.ஏ-க்ளை சென்னையில் கொண்டு சென்று மறைத்து வைத்தவர்கள், உங்களால் விரைவில் ஒழிக்கப்படுவார்கள்.

அவர்கள் எப்படி பதவிக்கு வந்தனர் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இன்றைக்கு வேண்டுமானால் அவர்கள் வேண்டாம், இவர்கள் வேண்டாம் என ஒர் அறைக்குள் இருந்து தீர்மானம் போடலாம். வெளியில் வந்து நின்று பாருங்கள். பதவி என்ற மமதையில் இருந்தால் தொண்டர்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

கோபத்தில் பேசுகிறார் என நினைக்க வேண்டாம்

தினகரன் ஏதோ கோபத்தில் பேசுகிறார் என்று நினைக்க வேண்டாம். கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றால், அவர்களின் அந்த தலைக்கனத்தை இறக்க வேண்டும் என்ற கடமையும் எங்களுக்கு இருக்கிறது.

பதவியில் இருந்து மக்களுக்கு தேவையானதை செய்யுங்கள். அப்படிச் செய்தால் தான், நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் மக்களைச் சந்திக்க முடியும். மக்களின் நலனில் அக்கறை கொண்டு திட்டங்கள் தீட்டுங்கள் என்பதை தான் இந்த மேடை மூலம் நான் கூறிக்கொள்ள கடமைப்பட்டிக்கிறேன்.

தொண்டர்கள் தான் எஜமானர்கள்

கட்சியை எப்படியாவது அபகரித்து விடலாம் என நினைக்காமல், ஒழுங்காக ஆட்சியில் இருங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கட்சி இல்லை. சட்டமன்ற உறுப்பினர்களை மாத்திரம் வைத்து எதையும் சாதித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். தொண்டர்கள் தான் எஜமானர்கள் அவர்கள் விருப்பப்படி செயல்படுங்கள்.

எம்.ஜி.ஆர்-க்கு விரோதிகளா?

இந்த கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துவிடக்கூடாது என நினைப்பது ஏன்? சட்டமன்ற உறுப்பினர்களை வழியிலேயே மறித்து பிடிக்ககின்றீர்கள். இந்த விழாவிற்கு வர விரும்பும் தொண்டர்களை உங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்க நினைக்கின்றீர்கள். நீங்கள் எங்களுகக்கு விரோதிகளா அல்லது எம்.ஜி.ஆர்-க்கு விரோதிகளா? சற்று நேரம் சிந்தித்து பாருங்கள். இல்லாவிட்டால், காலமும் மன்னிக்காது, கட்சித் தொண்டர்களும் மன்னிக்க மாட்டார்கள்.

தர்மத்துடன் யுத்தம் என்பது தர்மயுத்தம் ஆகாது!

ஜெயலலிதாவின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்கிறார்கள். தர்ம யுத்தம் நடத்துகிறேன் என்கிறார்கள். தர்மத்துடன் யுத்தம் நடத்துபவர்கள் தர்ம யுத்தம் நடத்துகிறேன் என்கிறார்கள் என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும்

துணைப்பொதுச்செயலாளராக பதவியேற்றபோதே எந்த விசாரணைக்கும் நாங்கள் தயார் என்று சொல்லியிருந்தோம். ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். அப்போது தான் உண்மை வெளிப்படும்.

ops

தர்மத்தை எதிர்த்து நீங்கள் போராட முடியாது. நிச்சயம் தர்மம் தான் ஜெயிக்கும்.
சதித்திட்டம் மூலம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற நினைப்பவர்கள் தயவு செய்து திருந்துங்கள். சதித்திட்டம் என்றும் வென்றதில்லை. 10 பேரால் எதையும் செய்துவிடமுடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close