தமிழகத்தில் துரோகிகளின் கூட்டாச்சி நடைபெற்று வருகிறது என நீட் எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு போராடிய அனிதா, நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் ஆங்கங்கே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அனிதாவின் உயிரிழப்புக்கு மத்திய – மாநில அரசுகள் தான் பொறுப்பு என குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகளும் போராட்டம், பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அதேசமயம், நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக போட்டிக் கூட்டங்களை கூட்டங்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி திருச்சி உழவர் சந்தையில் டிடிவி தினகரன் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். முன்னதாக, அவரது பொதுக் கூட்டத்துக்கு இரு முறை அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, தினகரன் கூட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன்படி, திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும் பேசிய அவர், சமூக நீதியில் இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக விளங்குகிறது. ஜெயலலிதா தனது கடைசி உயிர் மூச்சு உள்ளவரை நீட் வேண்டாம் என உறுதியுடன் இருந்தார். நீட் தேர்வை மன்மோகன் சிங் அரசாங்கம் அறிவித்த போது, அதனை ஜெயலலிதா எதிர்த்தார். கடைசி வரை நீட் தேர்வு இல்லாமல் அவர் பார்த்துக் கொண்டார். நீட் தேர்வு மட்டுமல்லாமல், 2005-ஆம் ஆண்டில் மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இருந்த நுழைவு தேர்வை ஜெயலலிதா ரத்து செய்தார்.
ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு இந்த ஆட்சியாளர்கள் விலக்கு பெறவில்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறாதது மாணவ-மாணவிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியாளர்களின் தவறான வாக்குறுதிகளால் தான் அனிதாவின் மரணம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது துரோகிகளின் கூட்டாட்சி. எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு செல்லும் காலம் நெருங்கி விட்டது. தேர்தலில் வென்று மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை மலரச் செய்வோம் என்றார்.
ஆளுநரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அவர் உத்தரவிட வேண்டும் எனவும் டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.
நியாயம் கேட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொய்யான காரணங்களை கூறி தகுதி நீக்கம் செய்துள்ளனர் என குற்றம் சாட்டிய தினகரன், எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நீதிமன்றத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக-வுடன் நான் கூட்டு வைக்கவில்லை. அதிமுக-வின் பிரதான எதிரி திமுக என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது தான் முக்கிய நோக்கம் என்றும் தனது உரையின் போது தினகரன் விளக்கமளித்தார்.