புதுவை கடற்கரை ஓரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன் அணி எம்எல்ஏ-க்கள், அங்குள்ள நட்சத்திர விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நீக்கப்பட்டார், இதையடுத்து, பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆகியோர் கை கோர்த்தனர். மேலும், விரைவில் கூடவுள்ள அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதேபோல், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் புதுவை கடற்கரை ஓரத்தில் உள்ள விண்டபிளார் எனும் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். இது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதேசமயம், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் அரசின் கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளார்.
இந்நிலையில், ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன் அணி எம்எல்ஏ-க்கள், அங்குள்ள நட்சத்திர விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். பெண் எம்எல்ஏ-க்கள் ஜெயந்தி, உமாமகேஸ்வரி ஆகியோர் இந்த நட்சத்திர விடுதிக்கு வரவில்லை. அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் தவிர ஏனைய எம்எல்ஏ-க்கள் 16 பேர் நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளனர்.