அதிமுக தலைமைக் கழகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களும் செல்லாது என டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் காட்டம் தெரிவித்துள்ளார்.
அதிமுக அணிகளின் மோதல் காரணமாக தமிழக அரசியல் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் இணைந்த பிறகு, சசிகலாவை கட்சியை விட்டு நீக்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில், அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில், “பொதுக்குழுவை விரைவில் கூட்ட வேண்டும். சசிகலா, தினகரனை ஒதுக்கி வைப்பது. தினகரனால் நியமிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது. அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர், ஜெயா டி.வி.,-யை கையகப்படுத்துவது” உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்களுக்கு டிடிவி தினகரன் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது: தினகரனால் நியமிக்கப்பட்டவர்கள் தங்களது பணியை தொடங்கி விட்டனர். தனியாருக்கு சொந்தமான நமது எம்ஜிஆர் நாளிதழ், ஜெயா டி.வி.,-யை கையகப்படுத்துவது 420 வேலை. அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லாது என்றார்.
மேலும், சட்டப்பேரவை உரிமைமீறல் குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உரிமை இல்லை என்ற நாஞ்சில் சம்பத், பெரும்பான்மையை இழந்த நிலையில் எப்படி உரிமை மீறல் குழுவை கூட்ட முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய நாஞ்சில் சம்பத், ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை. ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.