போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தை இன்று டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் திடீரென முற்றுகை இட்டனர். இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் இல்லமான வேதா இல்லத்திற்கு இன்று பகல் 11 மணிக்கு திரளான அதிமுக தொண்டர்கள் வருகை தந்தனர். சற்று நேரத்தில் டிடிவி ஆதரவாளர்களான மாவட்டச் செயலாளர்கள் வெற்றிவேல், செந்தமிழன் ஆகியோர் அங்கு வந்தனர்.
ஜெயலலிதாவுக்கு சாங்கிய முறைப்படி பூஜைகள் நடத்த தங்களை அனுமதிக்க வேண்டும் என அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாரிடம் அவர்கள் முறையிட்டனர். ஆனால் போலீஸ் அவர்களை விடவில்லை. அண்மையில் வருமான வரித்துறை ரெய்டின் போது, அந்த இல்லம் அரசுக் கட்டுப்பாட்டில் இல்லை என அமைச்சர்கள் கூறினர். எனவே எங்களை அனுமதிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை? என வெற்றிவேல் விவாதம் செய்தார்.
இதனால் பதற்றம் ஏற்பட்டது. மாதம் தோறும் செய்யும் பூஜைகளுக்காக ஐயர்களை அனுமதியுங்கள். நாங்கள் வரமாட்டோம் என்றும் வெற்றிவேல் கூறினார். அங்கு பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
பகல் 12.00 : போலீஸ் கண்டிப்புடன் அனுமதி கொடுக்க மறுத்ததால், டிடிவி ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து படிப்படியாக கலைந்தனர்.
பகல் 11.35: பூஜை செய்கிறவர்களை உள்ளே அனுமதிக்காததால் தொண்டர்களுக்கும், போலீஸுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பகல் 11.30: மாவட்டச் செயலாளர் கலைராஜன் கூறுகையில், ‘நங்கள் உள்ளே போகமாட்டோம். பூஜை செய்யும் பிராமணர்களை மட்டும் அனுமதியுங்கள்’ என்று கூறுகிறோம். அதற்கும் அனுமதிக்காவிட்டால் எப்படி?’ என கேள்வி எழுப்பினார்.
காலை 11.15: டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் கூறுகையில், ‘மாதாமாதம் அம்மாவுக்கு செய்கிற பூஜையை ஐ.டி. ரெய்டை காரணம் காட்டி அரசு தடுக்கிறது. இதை அனுமதிக்க முடியாது’ என்றார்.