ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக டிடிவி தினகரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளை ஓரங்கட்டிய தினகரன், சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்தநிலையில், இன்று (டிசம்பர் 29) தினகரன், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவியேற்று கொண்டார். இதற்காக அவர் தனது வீட்டில் இருந்து தலைமைச் செயலகம் கிளம்பும் போது, தென்சென்னை, தெற்கு மாவட்டம் சார்பில் மேளதாளம் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் பதவியேற்க காரில் சென்ற போது, வழிநெடுகிலும் தொண்டர்கள் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். பலரும் பூங்கொத்து, சால்வை அளித்து தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதற்காக தினகரன், திறந்த வெளியில் காரில் நின்று கொண்டு, தொண்டர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில், சரியாக மதியம் 1.40 மணிக்கு தினகரனுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து வரும் ஜனவரி 8-ஆம் தேதி தமிழக சட்டபேரவை கூடும் போது தினகரனும் கலந்து கொள்வார் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "சட்டமன்ற வாக்கெடுப்பின் போது எங்கள் ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள். ஜனவரி 20க்குள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வழக்கில் தீர்ப்பு வரும். சசிகலா தலைமையிலான இயக்கமே உண்மையான அதிமுக என ஆர்.கே. நகர் மக்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். மனதளவில் பல அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் எங்கள் பக்கம் உள்ளனர். அதிமுகவுக்கு ரத்தமும் சதையும் உயிருமாய் இருக்கின்ற தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். துரோக வரலாற்றில் துரோகத்திற்கு என்றைக்கும் வெற்றி கிடைத்ததில்லை" என்று தெரிவித்தார்.