ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணிகள் இணைந்த பிறகு டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், கவர்னர் வித்யா சாகர் ராவை கடந்த 22-ந் தேதி நேரில் சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்தனர்.
இந்தநிலையில் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் ஆகியோர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக குரல்கொடுத்தனர். இதனையடுத்து டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எம்.ஏ.க்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்தது.
இப்போது தேனியில் டிடிவி தினகரனை சந்தித்து திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
பின் பேட்டியளித்த போஸ், "பழனிசாமியை முதலமைச்சராக்கியது சசிகலாதான். சசிகலாவை தள்ளிவைத்துவிட்டு ஆட்சி செய்ய முடியாது. ஓ. பன்னீர் செல்வம் அணியை எனக்கு பிடிக்காது" என்று கூறினார். இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 22-ஆக தற்போது அதிகரித்து உள்ளது.
முன்னதாக, இன்று காலை ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், "113 எம்எல்ஏ-க்கள் ஆதரவே எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு அரசு மைனாரிட்டி அரசாக மாறி விட்டது. மைனாரிட்டி அரசு நீடிக்க கூடாது. மேலும், சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநரிடம் வைத்துள்ளோம். ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவோம்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் அதிரடி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "ஸ்டாலினும், டிடிவி தினகரனும் சேர்ந்து அடுத்த சில நாட்களில் கூட்டணி ஆட்சி அமைப்பர்" என்று குறிப்பிட்டுள்ளார்.