எடப்பாடியை நோக்கி தாவும் டிடிவி. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் : மேலூர் பொதுக்கூட்டத்திற்கு நெருக்கடி

டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பலரும் எடப்பாடி தரப்பை நோக்கி தாவுகிறார்கள். இதனால் மேலூர் பொதுக்கூட்டத்திற்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பலரும் எடப்பாடி தரப்பை நோக்கி தாவுகிறார்கள். இதனால் டிடிவி.தினகரனின் மேலூர் பொதுக்கூட்டத்திற்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

அதிமுக அம்மா அணியை கைவசம் வைத்திருப்பது யார்? என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், டிடிவி.தினகரன் தரப்புக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்ததே செல்லாது என எடப்பாடி தரப்பு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. டிடிவி.தினகரன் மாவட்டம் வாரியாக பொதுக்கூட்டங்களை நடத்தி, தனது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டிருக்கிறார்.

முதல் பொதுக்கூட்டம் ஆகஸ்ட் 14-ம் தேதி (நாளை) மதுரை மாவட்டம் மேலூரில் நடக்கிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து தனது மொத்த ஆதரவாளர்களையும் திரட்டிக் காட்டுவதில் தினகரன் தீவிரமாக இருக்கிறார். இந்தக் கூட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல் அரசு தரப்பு இழுத்தடிக்கலாம் என கருதிய டிடிவி.தினகரன், நீதிமன்றம் மூலமாக அனுமதி பெற்றிருக்கிறார். கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

எடப்பாடி அமைச்சரவையில் 5-க்கும் குறையாத எண்ணிக்கையில் டிடிவி.தினகரனின் தீவிர ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும் இப்போது எடப்பாடியை பகைத்துக்கொண்டு டிடிவி.யின் பொதுக்கூட்டத்திற்கு வரத் தயாரில்லை. சிறையில் இருந்து டிடிவி.தினகரன் திரும்பி வந்தபோது 37 எம்.எல்.ஏ.க்கள் வரிசையாக அவரை சென்று சந்தித்தார்கள்.

மேற்படி 37 எம்.எல்.ஏ.க்களையும் மேலூர் பொதுக்கூட்டத்தில் அணிவகுக்க வைத்து, எடப்பாடி தரப்புக்கு தனது பலத்தைக் காட டிடிவி விரும்பினார். ஆனால் அந்த எம்.எல்.ஏ.க்களில் பலர் இப்போது ஆட்சியை கைவசம் வைத்திருக்கும் எடப்பாடி தரப்பின் பாசப் பிடிக்குள் சிக்கிக் கொண்டார்கள். குறிப்பாக மதுரை சுற்று வட்டாரப் பகுதி எம்.எல்.ஏ.க்கள் பலரையும் ஆகஸ்ட் 13-ம் தேதியே சென்னைக்கு வர வைத்துவிட்டார்கள் எடப்பாடி தரப்பினர்!

அண்மையில் டிடிவி.யால் விவசாய அணியின் மாநில பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸும் ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னைக்கு வந்தார். இதில் விசேஷம் என்னவென்றால், உள்ளூர் அமைச்சர்கள் ஓரிருவருக்கும் போஸுக்கும் ஆகாது. ஆனால் அதே அமைச்சர்கள் இப்போது போஸை சந்தித்து, சமரசப்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் இன்று போஸ் சந்தித்து பேசினார்.

இதனால் டிடிவி.தினகரனின் மேலூர் பொதுக்கூட்டத்தில் 10 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றாலே ஆச்சர்யம் என்கிறார்கள். ஆகஸ்ட் 13 நிலவரப்படி, செந்தில்பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம், தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல், சாத்தூர் சுப்பிரமணியன் உள்ளிட்ட வெகு சில எம்.எல்.ஏ.க்கள்தான் பொதுக்கூட்ட மேடையை சுற்றி வந்தார்கள். இதனாலேயே கடைசி நேரத்தில் திவாகரனே களமிறங்கி தனது சகோதரி மகனுக்காக வேலையை ஆரம்பித்ததாக சொல்கிறார்கள்.

வழக்கமாக ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையேதான் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் போட்டி நடக்கும். இப்போது அம்மா அணிக்குள் அந்த யுத்தம் நடக்கிறது. ‘குதிரை பேரத்தை பிறகு பார்க்கலாம். நீட் தேர்வு விலக்கை கவனியுங்கள்’ என நடிகர் கமல்ஹாசன் டிவிட் செய்ததும்கூட இந்த விவகாரத்தை வைத்தே என்கிறார்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close