Advertisment

நீட் தேர்வை எதிர்த்து 9-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் அறிவிப்பு

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீட் தேர்வை எதிர்த்து 9-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அதிமுக அம்மா அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார். செப்.,9-ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., (MBBS, BDS) ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு 'நீட்' என்னும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிவித்து, மாநில அரசின் துணையோடு அதனை கட்டாயமாக மாணவர்கள் மீது திணித்திருப்பதால், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் பறிபோவது நம்மை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன.

பள்ளிக் கல்வியை வெவ்வேறு பாடத்திட்டங்கள் வழியாக மாணவர்கள் பயின்று வரும் சூழ்நிலையில், சி.பி.எஸ்.இ. என்ற மத்திய அரசின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் மட்டும் பெரும் பயன் அடையும் வகையில் 'நீட்' தேர்வுக்கான கேள்வித் தாள்கள் அமைந்துள்ளதால், மாநில அரசின் பாடத் திட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் எவ்வளவு திறமையும், அறிவும் கொண்டிருந்தாலும் 'நீட்' தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

அரியலூர் மாவட்டம், குழுமூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா +2 பொதுத் தேர்வில் பல பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தாலும் 'நீட்' தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவக் கல்வி வாய்ப்பினை இழந்த அவலத்தையும், அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்ட துயரத்தையும் தமிழகம் கண்டு மனம் வெதும்பி நிற்கிறது.

மாநில அரசின் உரிமைகளைப் பறித்து, ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ உயர்க்கல்வி வாய்ப்புகளை தகர்க்கும் மத்திய அரசின் 'நீட்' தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்தார்.

இதனால், அதிமுக அம்மா மாணவர் அணியின் சார்பில் சென்னையில் 9.9.2017 சனி அன்று காலை 10.00 மணியளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சமூக நீதியை பாதுகாக்கும் வகையில் மாபெரும் 'நீட்' தேர்வு எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான அளவில் மாணவச் செல்வங்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு நம் உணர்வுகளை வெளிக் காட்டிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Anitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment