துரோகிகள் எந்த நதியில் மூழ்கி மூழ்கி எழுந்தாலும் அவர்களது பாவம் அவர்களை விட்டு நீங்காது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக-விற்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். திருச்சியில் நடைபெற்ற கூட்டம் என்பது மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது போல அமைந்தது. தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது, அனிதாவின் மரணம் அனைவரையும் பாதித்துள்ளது. 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தபோதும் மருத்துவம் படிக்க முடியவில்லை என்பது வேதனையளிக்கிறது.
கட்சியைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை, சபாநாயகர் தனபால் ஜனநாயகப் படுகொலை மூலம் நீக்கியிருக்கிறார். முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எதிராக வாக்களித்த ஓ பன்னீர் செல்வத்தை சபாநாயகர் நீக்காமல், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று கூறிய எம்.எல்.ஏ-க்களை நீக்கியிருக்கிறார். அவர் அனுப்பியிருப்பதைப் பார்த்தால் அரசியல் ரீதியிலான கடிதம் போல இருக்கிறது. நாங்கள் எதற்காக திமுக-வுடன் எதற்கு தொடர்பு வைத்திருக்க வேண்டும்?
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நதியில் நீராடுகிறாராம். பொதுச்செயலாளர் மற்றும் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு செய்த துரோகமானது எந்த நதியில் குளித்தாலும் சரியாகாது. ராமேஸ்வரத்தில் குளித்தாலும், காசியில் குளித்தாலும் சரி அல்லது ஆற்றையே கடந்தாலும் இதுபோன்ற துரோகங்கள் மறையாது. துரோகிகள் அனைவரும் ஆற்றில் மூழ்கி எழுவதனால் ஆற்றின் புனிதத் தன்மைதான் கெடும். இவர்களின் துரோகமானது தமிழக வரலாற்றில் மன்னிக்கப்பட முடியாத ஒன்று.
கடந்த மாதம் 22-ம் தேதி எங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் சென்று ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கிறோம். 19 பேர் ஆதரவு இல்லை என்றாலே, எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். ஆனால், ஆளுநர் உட்கட்சி பிரச்சனை எனகூறி அதனை தள்ளிப்போடுகிறார். ஆளுநர் தனே மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என கேட்க வேண்டும். இதில் எதிர்கட்சித் தலைவர் காத்திருந்து பின்னர் நீதிமன்றத்துக்கு செல்கிறார். நாகரிகமான அரசியல் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். எதிர்க்கட்சிகள் என்றாலே அவர்களை தாழ்த்தி பேச வேண்டும் என்ற சுபாவம் எனக்கு கிடையாது. ஐனநாயத்திலே இந்த விவகாரத்தை எப்படி அணுக வேண்டுமே அப்படித் தான், எங்களது சட்டமன்ற உறுப்பினர்களும் அணுகுகின்றனர். திமுக-வும் அப்படி தான் அணுகின்றனர். தற்போது, வித்யாசாகர்ராவ் தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக இருந்திருந்தால் கூட அவர் பாஜக-வின் பிரதிநிதி தான்.
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.