தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டின் முன்பு டிடிவி தினகரனின் உருவபொம்மையை எரித்து சாலைமறியலில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. இவர் தீ.நகரில் உள்ள பூர்வீக வீட்டில் குடியிருந்து வருகிறார். ஜெயலலிதா இறந்த போது அவரை இறுதி சடங்கு நடக்கும் இடத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர் புரட்சி தலைவர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார்.
இந்நிலையில் இன்று காலை அவர் திடீரென போயஸ்கார்டனுக்கு தனது கணவருடன் சென்றார். அங்கு அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் கோபமான அவர் தனது தம்பி தீபக், சசிகலாவுடன் சேர்ந்த அத்தை ஜெயலலிதாவை கொன்றதாக குற்றம்சாட்டினார். அவரை போலீசார் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். தீபாவின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக காவலாளிகள் 2 பேர் கைதானார்கள்.
இந்த செய்தி பரவியதும், தி.நகரில் உள்ள தீபா வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். அவர்கள் டிடிவி.தினகரன் உருவ பொம்மையை சாலையில் போட்டு எரித்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்ட தீபாவின் ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.