ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அப்போது, இரட்டை இலை சின்னத்திற்கு இரு அணிகளும் உரிமை கொண்டாடின. இதன் காரணமாக அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக, அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணைத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள தில்லி போலீஸார் டிடிவி தினகரனை கைது செய்தனர். தில்லியில் இருந்து சென்னைக்கு தினகரனை அழைத்து வந்த தில்லி போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளதாவது, தினகரன் கைதுக்கு பின்னால் சதித்திட்டம் உள்ளது. இந்த சதித்திட்டத்தை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க தயாராக இருக்கிறோம். தினகரன் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது. தினகரன் தற்போது தான் பலமாக இருக்கிறார். தினகரனை அவமானப்படுத்த வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். தினகரன் கைதுக்கு பின்னால் பாஜக உள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணைக்கு நாங்கள் ஒருபோதும் இடையூராக இருக்க மாட்டோம். மேலும், தினகரனுக்கு ஆதரவாக 87 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக அவர் கூறினார்.