கட்சியில் இருந்து யாரும் என்னை நீக்க முடியாது என்று ஜாமீனில் வெளியே வந்த டிடிவி.தினகரன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறினார்.
அதிமுக சின்னமான இரட்டை இலையை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது.
நேற்று இரவு டிடிவி.தினகரன் ஜெயிலில் இருந்து விடுதலையானார். அவரை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். டெல்லி ஹோட்டலில் தங்கியிருந்த அவர், இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் நிலையம் வந்தார். அப்போது நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
‘கட்சியில் இருந்து யாரும் என்னை நீக்க முடியாது. அந்த அதிகாரம் பொது செயலாளருக்கு மட்டுமே உள்ளது. நான் இப்போதும் கட்சி பணியில்தான் இருக்கிறேன். சென்னை சென்றதும் வழக்கம் போல கட்சி பணிகளை தொடர்வேன். மத்திய அரசுக்கு பணிந்து செயல்பட வேண்டிய அவசியம் மாநில அரசுக்கு இல்லை. இணைந்து வேண்டுமானால் செயல்படலாம். அதில் ஏதும் தப்பில்லை.’ இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.
இன்று பகல் 12.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேரும் டிடிவி.தினகரனை வரவேற்க அதிமுக தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிய தொடங்கியுள்ளனர்.