இரட்டை இலை விவகாரம் தொடர்பாகக் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
இரட்டை இலை சின்னம் குறித்து அக்டோபர் 31ம் தேதிக்குள் தேர்தல் கமிஷன் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்றக் கிளையில் தினகரன் தாக்கல் செய்த மனுவில், எங்கள் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். அதன்பின் இரட்டை இலை விவகாரத்தில் முடிவு எடுக்க, 2018 பிப்.,28 வரை தேர்தல் கமிஷனுக்கு காலநீட்டிப்பு வழங்கி உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனுவானது, நீதிபதிகள் எம்.வேணுகோபால், அப்துல் குத்தூஸ் அமர்வு முன் நேற்று(அக்.,4) விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இன்று, தினகரன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், 'கோரிக்கை குறித்து தேர்தல் கமிஷனை அணுகலாம். இந்த விவகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது' எனக்கூறினர்.
அதிமுக இரட்டை இலைச் சின்னம் தொடர்பான இறுதி விசாரணை, தேர்தல் கமிஷனில் நாளை(அக்.6) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.