தேர்தல் ஆணைய லஞ்ச வழக்கில் தினகரன் விடுதலையா? : குற்றப்பத்திரிகையில் பெயர் இல்லை

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீஸார் இன்று தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரன் பெயர் இல்லை.

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீஸார் இன்று தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரன் பெயர் இல்லை. எனவே வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையை கைப்பற்றுவதில் சசிகலா அணிக்கும், ஓ.பி.எஸ். அணிக்கும் பலப்பரீட்சை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்கு அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் கைதானார்கள்.

ஆனால் இதில் லஞ்சம் பெற முயன்ற தேர்தல் ஆணைய அதிகாரி யார்? என்பதை டெல்லி போலீஸார் கடைசிவரை கண்டுபிடிக்கவில்லை. இதை சுட்டிக்காட்டியே 69 நாட்கள் திகார் சிறையில் இருந்த தினகரனுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார். இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டு விடுதலை ஆவேன் என தினகரன் தொடர்ந்து கூறி வந்தார்.

இந்தச் சூழலில் இந்த வழக்கில் ஜூலை 14-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் அங்குள்ள நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் டி.டி.வி.தினகரன் பெயரே இல்லை. சுகாஷ் சந்திரசேகருக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையில் நடந்ததாக கூறப்படும் உரையாடலை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் டி.டி.வி. பெயரை சேர்க்கவில்லை எனத் தெரிகிறது. இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகரை குற்றப்பத்திரிகையில் போலீஸார் சேர்த்துள்ளனர்.

இது குறித்து டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இதை மட்டுமே வைத்துக்கொண்டு டி.டி.வி.தினகரன் விடுதலை ஆகிவிட்டதாக கருதக்கூடாது. உரிய ஆதாரங்கள் கிடைக்கும்பட்சத்தில் டி.டி.வி. பெயரை சேர்த்து துணை குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்யும் வாய்ப்பு இருக்கிறது’ என்றார்.

சசிகலாவுக்கு சிக்கல் அதிகரிக்கும் வேளையில், டி.டி.வி ‘ரிலாக்ஸ்’ ஆவது அம்மா அணியினரை சற்றே ஆனந்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

×Close
×Close