ஆகஸ்ட் 4-ம் தேதிக்குப் பிறகு தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியுமாக அதிமுக பிரிந்தது. முதலமைச்சர் ஆக வேண்டும் என கனவு கண்ட சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைவாசம் சென்றார்.
இதனையடுத்து, கட்சியை வழிநடத்த துணைப்பொதுச்செயலாளராக வந்தார் டிடிவி தினகரன். ஜெயலலிதாவின் மறைவினால் காலியான, அவரது தொகுதியில் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அப்போது, இரட்டை இலை சின்னத்திற்கு டிடிவி தினகரன் தரப்பும், ஓ பன்னீர் தரப்பும் உரிமை கோரின.
இதனால், இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். இதைத்தொடர்ந்து ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடா புகார் எழவே, இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரில் டிடிவி தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அந்த சமயத்தில், அதிமுக-வின் இரு அணிகளும் இணைவதற்காக கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்குவதாக தெரிவித்தார் டிடிவி தினகரன். ஆனாலும், இரு அணிகளும் இணைவதாக தெரியவில்லை. பின்னர் ஜாமினில் வெளிவந்த டிடிவி தினகரன் மீண்டும் கட்சிப் பணியாற்றுவேன் என்று அறிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில், எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவு, ஓ. பன்னீர் செல்வம் ஒரு முடிவு மற்றும் கடைசியாக டிடிவி தினகரன் ஒரு முடிவு என மாறி மாறி பாஜக-விற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இரண்டாக உடைந்த அதிமுக, இதன் மூலம் மூன்றாக உடைந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிடிவி தினகரன் மன்னார் குடியில் வைத்து இன்று செய்தியார்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: துணை பொதுச் செயலாளர் என்ற முறையிலும், கட்சியின் தொண்டனாகவும் என்னுடைய முதல் பணி கட்சியை பலப்படுத்துவதே. அதனை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு பின்னர் தொடர்வேன். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பேன்
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைவதற்கு எங்கள் குடும்பம் தடையாக இருப்பதாக சில நண்பர்கள் தெரிவித்தனர். அதனால் தான் கொஞ்ச நாட்கள் நான் கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறியிருந்தேன்.
தற்போது, கட்சியை ஒன்றிணைத்து, கட்சியை பலப்படுத்துவதும் மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்குவதுமே எனது நோக்கம் என்று கூறினார்.