துணைப்பொதுச்செயலாளர் தற்போது செயல்படாத நிலையில் இருப்பதால், அவரது இடத்தில் இருந்து துணைப்பொதுச்செயலாளர் என்ற முறையில் செயல்படுவேன். அதனால், கட்சியின் நலன் கருதி எனது நடவடிக்கை இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவத்துள்ளார்.
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கம். எனவே, மாபெரும் வெற்றியை பெறுவதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன்.
எனது முதன்மையான கட்சிப் பணிகள் என்ன என்பது குறித்து முன்னதாக கூறியதுபோல, இன்னும் இரண்டு நாட்களில் தெரிவிப்பேன். எதற்காக கால அவகாசம் அளித்தேனோ அதில் எல்லளவும் முன்னேற்றம் இல்லை. கட்சியின் தொண்டனாக மட்டுமல்லாமல், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சிக்காக எனது பணியை செய்ய வேண்டிய கடமை உள்ளது.
தொண்டர்கள் என்னை தொடர்ந்து சந்தித்து செல்கின்றனர். துணைப்பொதுச்செயலாளர் தற்போது செயல்பட முடியாத நிலையில் இருப்பதால், அவரது இடத்தில் இருந்து துணைப்பொதுச்செயலாளர் என்ற முறையில் செயல்படுவேன். அதனால், கட்சியின் நலன் கருதி எனது நடவடிக்கை இருக்கும்.
கட்சி மற்றும் ஆட்சி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருக்கிறாரே?
ஜெயக்குமார் ஏற்கனெவே பல கருத்துகளை தெரிவித்திருக்கிறார். அவரை எனது நண்பராகவே இன்னும் கருதுகிறேன். கட்சியின் துணைப்பொதுசெயலாளர் என்ற முறையில் கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதால் நான் எனது பணியை கண்டிப்பாக செய்வேன்.
நடிகர் கமல்ஹாசன் குறித்து ?
கமல் பொறுப்பான இடத்திலே இருப்பவர் என்பதால், அவர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டை கூறவேண்டும். அதே நேரத்தில் அமைச்சர்களுக்கும் பிறர் கூறும், குற்றச்சாட்டுகளை பொறுமையாக கேட்டு, ஒருமையில் விமர்சனம் செய்யக்கூடாது என்பதோடு, அதனை அரசியல் ரீதியாக அணுக வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, யாருக்கும் போட்டியில்லாமல், எனது பணியை நான் செய்வேன். கடந்த சில மாதங்களாக மற்றவர்கள் கூறியதெல்லாம் பொய் என்பது தெரியவரும். நான் ஒதுங்கியிருக்க வேண்டும் என பயத்தின் காரணமாகவே கூறினார்கள் என்பதை காலம் உணர்த்தும் என்று கூறினார்.